உள்துறை மந்திரியின் உத்தரவின் பேரில் தான் தடியடி நடந்தது; முன்னாள் மந்திரி அனில் தேஷ்முக் குற்றச்சாட்டு
|உள்துறை மந்திரியின் உத்தரவின் பேரில் தான் தடியடி நடத்தப்பட்டதாக முன்னாள் மந்திரி அனில் தேஷ்முக் குற்றம் சாட்டியுள்ளார்.
மும்பை,
உள்துறை மந்திரியின் உத்தரவின் பேரில் தான் தடியடி நடத்தப்பட்டதாக முன்னாள் மந்திரி அனில் தேஷ்முக் குற்றம் சாட்டியுள்ளார்.
கலவரம்
ஜல்னா மாவட்டத்தில் உள்ள அந்தர்வாலி சாரதி கிராமத்தில் மராத்தா இடஒதுக்கீடு கேட்டு நடைபெற்ற போராட்டததில் கடந்த வெள்ளிக்கிழமை திடீரென கலவரம் வெடித்தது. போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் கலவரத்தை கலைத்தனர். இந்த போராட்டத்தில் 15-க்கும் மேற்பட்ட பஸ்கள் தீவைத்து எரிக்கப்பட்டன. போலீசார் உள்பட 40 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த தடியடி சம்பவத்திற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்தநிலையில் முன்னாள் உள்துறை மந்திரி அனில்தேஷ்முக் கூறியதாவது:-
அதிகாரிகள் பலிகடா...
போலீசாரின் மனிதாபிமானமற்ற நடவடிக்கை மிகவும் துரதிருஷ்டவசமானது. நான் மராட்டியத்தின் உள்துறை மந்திரியாக பணியாற்றி இருக்கிறேன். எனக்கு கிடைத்த தகவலின்படி உள்துறை மந்திரியிடம் இருந்து தொலைபேசி மூலம் கிடைத்த உத்தரவின் பேரில் தான் ஜல்னா மாவட்டத்தில் மராத்தா போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தப்பட்டு உள்ளது. மூத்த அதிகாரிகளின் உத்தரவு இல்லாமல் போலீஸ் அதிகாரிகள் இத்தகைய நடவடிக்கை எடுக்க முடியாது. தொலைபேசி அழைப்பு குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி விசாரணை நடத்த வேண்டும். போலீசாரின் நடவடிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து ஜல்னாவில் மூத்த போலீஸ் அதிகாரிகள் பலிகடா ஆக்கப்பட்டு உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.