பயங்கரவாதம், சைபர் குற்றங்கள் மும்பை போலீசாருக்கு சவாலாக உள்ளது- போலீஸ் கமிஷனர் பேட்டி
|பயங்கரவாதம், சைபர் குற்றங்கள் மும்பை போலீசாருக்கு சவாலாக உள்ளது என போலீஸ் கமிஷனர் விவேக் பன்சால்கர் கூறியுள்ளாா்.
மும்பை,
பயங்கரவாதம், சைபர் குற்றங்கள் மும்பை போலீசாருக்கு சவாலாக உள்ளது என போலீஸ் கமிஷனர் விவேக் பன்சால்கர் கூறியுள்ளாா்.
பயங்கரவாதம்
மும்பை போலீஸ் கமிஷனராக சமீபத்தில் விவேக் பன்சால்கர் பொறுப்பேற்று கொண்டார். அவர் அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது:-
பெண்கள், குழந்தை, முதியவர்கள் மற்றும் சமூகத்தில் ஒடுக்கப்பட்டவர்களின் பாதுகாப்புக்கு மும்பை போலீசார் முக்கியத்துவம் அளித்து வருகின்றனர். மும்பை முக்கியமான நகரம். இதை பாதுகாக்க போலீசார் பயங்கரவாத தடுப்பு பிரிவு, புலனாய்வு பிரிவு உள்ளிட்ட அனைத்து துறையினருடன் ஒருங்கிணைந்து இரவு, பகலாக உழைக்கின்றனர்.
பயங்கரவாதத்தை கையாள்வது மும்பை போலீசாருக்கு முன் உள்ள சவால். நகரை பாதுகாப்பாக பயங்கரவாத அச்சுறுத்தல் இல்லாத நகராக மாற்ற இடைவிடாமல் பணியாற்றி வருகிறோம். ஒவ்வொரு நபரின் பாதுகாப்பை உறுதி செய்வது தான் மும்பை போலீசாரின் முதன்மை பணி. கடந்த சில ஆண்டுகளாக நகரம் பாதுகாப்பாக உள்ளது. பயங்கரவாதத்தை ஒழிக்க தொடர்ந்து கடுமையாக உழைத்து வருகிறோம்.
சைபர் குற்றங்கள்
போலீசார் அடிமட்ட அளவில் இருந்து உளவு தகவல்களை பெற வேண்டும். பொதுமக்கள் வழக்கமாக சந்திக்க வேண்டும். மும்பை போலீசார், நமது போலீஸ் என்ற எண்ணம் மக்கள் இடையே ஏற்படவேண்டும். பொதுமக்கள் எதுவும் சந்தேகம்படும்படி இருந்தால் உடனடியாக போலீஸ் கட்டுபாட்டு அறைக்கு தகவல் கொடுக்க வேண்டும். அனைத்து பிரிவுகளின் கூட்டு முயற்சியால், மும்பைவாசிகள் பயங்கரவாதம் இல்லாத வாழ்க்கையை வாழ முடியும் என்பதை உறுதி அளிக்கிறேன்.
அதிகரித்து வரும் சைபர்குற்றங்களும் போலீசாருக்கு சவாலாக உள்ளது. அதை எதிர்கொள்ள நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
இவ்வாறு அவர் பேசினார்.