< Back
மும்பை
அகமதுநகர் அருகே ஓடும் ரெயிலில் பயங்கர தீ; பயணிகள் காயமின்றி தப்பினர்
மும்பை

அகமதுநகர் அருகே ஓடும் ரெயிலில் பயங்கர தீ; பயணிகள் காயமின்றி தப்பினர்

தினத்தந்தி
|
17 Oct 2023 12:15 AM IST

அகமதுநகர் அருகே ஓடும் ரெயில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

மும்பை,

அகமதுநகர் அருகே ஓடும் ரெயில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

பயணிகள் ரெயிலில் தீ

பீட் மாவட்டம் அஸ்தி ரெயில் நிலையத்தில் இருந்து அகமதுநகருக்கு நேற்று பயணிகள் ரெயில் ஒன்று சென்று கொண்டு இருந்தது. பிற்பகல் 3 மணியளவில் ரெயில் அகமதுநகர் அருகே உள்ள நாராயண்தோக் ரெயில் நிலையம் அருகில் சென்றது. அப்போது திடீரென ரெயிலின் கார்டு பகுதி பிரேக் வேனில் தீப்பிடித்ததாக தெரிகிறது. பெட்டியில் தீப்பிடித்ததை அடுத்து உடனடியாக ரெயில் நிறுத்தப்பட்டது. ரெயிலில் இருந்த பயணிகள் அலறியடித்தப்படி கீழே இறங்கினர். பயணிகள் இறங்கிய சில நிமிடங்களில் ரெயிலில் தீ வேகமாக பரவியது. ரெயிலின் பிரேக் வேன் மற்றும் அதன் அருகில் இருந்த 4 பெட்டிகளில் தீ கொழுந்து விட்டு எரிந்தது.

பயணிகள் காயமின்றி தப்பினர்

தகவல் அறிந்து அகமதுநகரில் இருந்து தீயணைப்பு படையினர் விரைந்தனா். அவர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராடி ரெயில் பெட்டிகளில் பிடித்த தீயை அணைத்தனர். இந்த விபத்தில் பயணிகள் காயமின்றி உயிர் தப்பியதாக மத்திய ரெயில்வே தெரிவித்து உள்ளது. பயணிகள் ரெயில் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்