அடுக்குமாடி கட்டிடத்தில் பயங்கர தீ- மூதாட்டி பலி
|குர்லா அடுக்குமாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்தில் மூதாட்டி பலியானார். மூச்சு திணறலால் பாதிக்கப்பட்ட 8 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மும்பை,
குர்லா அடுக்குமாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்தில் மூதாட்டி பலியானார். மூச்சு திணறலால் பாதிக்கப்பட்ட 8 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பயங்கர தீ
மும்பை குர்லா கோகினூர் சிட்டி காம்பவுண்ட்டில் உள்ள 13 மாடி குடியிருப்பு கட்டிடத்தில் நேற்று காலை 7 மணி அளவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. 4-வது மாடியில் பற்றிய தீ 'மள மள' வென கொழுந்து விட்டு எரிந்து 10-வது மாடி வரையில் பரவியதோடு, கட்டிடத்தை கரும்புகை சூழ்ந்தது.
இதில் சிக்கி தவித்த பலர் செய்வதறியாமல் மொட்டை மாடிக்கு ஓட்டம் பிடித்தனர். தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து வந்தனர். அவர்கள் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். மேலும் ராட்சத ஏணிகள் மூலம் கட்டிடத்தில் தவித்தவர்களை மீட்கும் பணியிலும் ஈடுபட்டனர்.
மூதாட்டி பலி
இவர்களில் மூச்சு திணறலால் மயங்கி கிடந்த 9 பேர் மீட்கப்பட்டு, உடனடியாக அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் சகுந்தலா ரமணி என்ற 70 வயது மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 8 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் மூதாட்டி ஒருவர் பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.