< Back
மும்பை
இன்னும் சில மாதங்களில் ஷிண்டே அரசு கவிழும்- ஆதித்ய தாக்கரே ஆருடம்
மும்பை

இன்னும் சில மாதங்களில் ஷிண்டே அரசு கவிழும்- ஆதித்ய தாக்கரே ஆருடம்

தினத்தந்தி
|
8 Nov 2022 12:15 AM IST

வரும் மாதங்களில் ஷிண்டே அரசு கவிழும் என்று ஆதித்ய தாக்கரே பேசினார்.

மும்பை,

வரும் மாதங்களில் ஷிண்டே அரசு கவிழும் என்று ஆதித்ய தாக்கரே பேசினார்.

துரோகிகள் அரசு கவிழும்

உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவை வலுப்படுத்தும் நோக்கில் அந்த கட்சியின் இளைஞர் அணி தலைவரும், முன்னாள் மந்திரியுமான ஆதித்ய தாக்கரே மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தொண்டர்களை சந்தித்து வருகிறார்.

நேற்று அவர் அகோலாவில் நடந்த கட்சி பொதுக்கூட்டத்தில் பேசியதாவது:-

துரோகிகளை கொண்ட மராட்டிய அரசு வரும் மாதங்களில் கவிழும். இதனால் சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல் நடைபெற உள்ளது. எனவே தேர்தலை சந்திக்க தொண்டர்கள் தயாராக இருக்க வேண்டும்.

2.5 லட்சம் வேலைவாய்ப்புகள் இழப்பு

ஷிண்டே தலைமையிலான அரசு 4 மிகப்பெரிய தொழில் திட்டங்களை இழந்து உள்ளது. அந்த திட்டங்கள் வேறு மாநிலங்களுக்கு சென்று விட்டன. இதன் மூலம் மராட்டியம் 2 லட்சத்து 50 ஆயிரம் வேலைவாய்ப்புகளை இழந்து உள்ளது.

ஷிண்டேக்கு நெருக்கமாக இருக்கும் தொழில் துறை மந்திரி உதய் சாமந்தின் செயல்பாடுகள் மிக மோசமாக உள்ளது. அவரால் மராட்டியம் தொழில் முதலீடு வாய்ப்புகளை தொடர்ந்து இழந்து வருகிறது.

மராட்டிய முதல்-மந்திரி ஷிண்டேயா அல்லது தேவேந்திர பட்னாவிசா என்ற குழப்பம் அனைவரிடமும் உள்ளது. சட்டவிரோதமாக அமைந்த இந்த அரசு விவசாயிகளின் நலனை காக்க தவறிவிட்டது.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்