உதயநிதி ஸ்டாலினின் சனாதன கருத்து: சரத்பவார், உத்தவ் தாக்கரே நிலைப்பாடு என்ன? பாஜக வலியுறுத்தல்
|உதயநிதி ஸ்டாலினின் சனாதன கருத்து குறித்து சரத்பவார், உத்தவ் தாக்கரே தங்கள் நிலைபாட்டை தெரிவிக்க வேண்டும் என பா.ஜனதா மாநில தலைவர் சந்திரசேகர் பவன்குலே கூறியுள்ளார்.
மும்பை,
தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் சனாதனம் குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தநிலையில் உதயநிதி ஸ்டாலினின் சனாதன கருத்து தொடர்பாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், மராட்டிய முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தங்களது நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும் என மராட்டிய மாநில பா.ஜனதா தலைவர் சந்திரசேகர் பவன்குலே வலியுறுத்தி உள்ளார்.
இது குறித்து அவர் நேற்று மும்பையில் நிருபர்களிடம் கூறுகையில், "இந்து மதம், கலாசாரம் குறித்து உதயநிதி ஸ்டாலின் பேசியதற்கு அவா்கள் (உத்தவ் தாக்கரே, சரத்பவார்) ஆதரவளிப்பது போல தெரிகிறது. அதை அவர்கள் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். அல்லது இந்தியா கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும்" என கூறியுள்ளார்.
கூட்டணி கட்சி வெற்றிக்கு உதவி
இதேபோல நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி தொகுதி பங்கீடு குறித்து அவர் கூறியதாவது:- நாடாளுமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு, யாருக்கு எத்தனை தொகுதிகள் என்பது குறித்து பா.ஜனதா மத்திய குழு தான் இறுதி முடிவு எடுக்கும். தொகுதி பங்கீடு தொடர்பாக பா.ஜனதா கூட்டணியில் எந்த வேறுபாடும் இல்லை. 3 கட்சிகளும் தேர்தலில் வெற்றி பெற ஒருவருக்கு மற்றொருவர் உதவி செய்வார்கள். பா.ஜனதா கூட்டணி மாநிலத்தில் 48-ல் 45 தொகுதிகளில் வெற்றி பெறும். இவ்வாறு அவர் கூறினார்.