மாவட்ட செய்திகள்
மராட்டியத்தில் இருந்து 6 பேரை தேர்ந்தெடுக்க நடைபெறும் மாநிலங்களவை தேர்தலில் 7 பேர் போட்டி
|மராட்டியத்தில் இருந்து 6 பேரை தேர்வு செய்ய நடைபெறும் மாநிலங்களவை எம்.பி. தேர்தலில் 7 பேர் போட்டியிடுகின்றனர். காங்கிரஸ் வேட்பாளருக்கு உள்கட்சியில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
மும்பை,
மராட்டியத்தில் இருந்து 6 பேரை தேர்வு செய்ய நடைபெறும் மாநிலங்களவை எம்.பி. தேர்தலில் 7 பேர் போட்டியிடுகின்றனர். காங்கிரஸ் வேட்பாளருக்கு உள்கட்சியில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
10-ந் தேதி தேர்தல்
மராட்டியம், தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் 57 மாநிலங்களவை எம்.பி.க்களின் பதவிக்காலம் முடிவடைகிறது.
இந்த 57 எம்.பி.க்கள் இடங்களுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதன்படி வருகிற 10-ந் தேதி மாநிலங்களவை எம்.பி. பதவிக்கான தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் (மே) 24-ந் தேதி தொடங்கியது.
ஒவ்வொரு மாநிலங்களவை எம்.பி தேர்வாவதற்கும் தலா 34 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை. அதன்படி மராட்டியத்தில் பா.ஜனதா 2 இடங்களில் வெற்றி பெற முடியும். ஆளும் கூட்டணி கட்சிகளான சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தலா ஒரு இடங்களிலும், இந்த 3 கட்சிகளும் சேர்ந்து ஒரு இடத்திலும் வெற்றி பெற முடியும்.
7 பேர் போட்டி
இந்தநிலையில் சிவசேனா சார்பில் சஞ்சய் ராவத் மற்றும் சஞ்சய் பவார் ஆகியோர் களம் இறக்கப்பட்டு உள்ளனர். தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பில் பிரபுல் படேலும், காங்கிரஸ் கட்சி சார்பில் இம்ரான் பிரதாப் காரியும் வேட்பாளராக நிறுத்தப்பட்டு உள்ளனர்.
இந்தநிலையில் பரபரப்பை ஏற்படுத்திய பா.ஜனதா தனது கட்சி பலத்தை மீறி 3 வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது. அதன்படி மத்திய மந்திரி பியூஷ் கோயல், கட்சியின் மூத்த தலைவர் அனில் பாண்டே மற்றும் தனஞ்செய் மகாதிக் ஆகியோர் அறிவிக்கப்பட்டனர்.
இந்த தேர்தலில் இன்று வேட்பு மனு தாக்கல் முடிந்தது. மேற்கண்ட 4 கட்சி சார்பில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் வேட்பு மனுவை தாக்கல் செய்தனர். எனவே 6 பேரை தேர்வு செய்ய வேண்டிய தேர்தலில் 7 பேர் போட்டியில் உள்ளனர்.
வாக்குப்பதிவு நடைபெறுமா?
வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நாளை (புதன்கிழமை) நடைபெறுகிறது. 3-ந்தேதி வேட்பு மனுவை திரும்ப பெற கடைசி நாள் ஆகும்.
யாராவது ஒருவர் வேட்பு மனுவை திரும்ப பெற்றால், 6 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார்கள். இல்லாவிட்டால் வாக்குப்பதிவு நடைபெறுவது தவிர்க்க முடியாததாகி விடும். இந்த தேர்தலில் எம்.எல்.ஏ.க்கள் ஓட்டுப்போடுவார்கள்.
காங்கிரஸ் வேட்பாளருக்கு எதிர்ப்பு
இதற்கிடையே காங்கிரஸ் சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ள இம்ரான் பிரதாப் காரி உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர். இதற்கு மராட்டிய காங்கிரசில் எதிர்ப்பு கிளப்பி உள்ளது. குறிப்பாக முன்னாள் முதல்-மந்திரி பிரிதிவிராஜ் சவான் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
மேலும் இ்ம்ரான் பிரதாப் காரியை வேட்பாளராக நிறுத்தியதற்கு பகிரங்க எதிர்ப்பு தெரிவித்து மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ஆசிஷ் தேஷ்முக் ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பாக அவர் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கடிதமும் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், "வெளிமாநிலத்தை சேர்ந்தவரை மராட்டியத்தில் போட்டியிட செய்வது மாநில காங்கிரஸ் வளர்ச்சிக்கு உதவாது. மேலும் இது மாநில காங்கிரசில் உண்மையாக உழைக்கும் தொண்டர்களுக்கு செய்யப்பட்ட அநீதி" என்று கூறப்பட்டு உள்ளது.
மாநிலங்களை தேர்தல் விவகாரத்தில் காங்கிரசில் உள்கட்சி பிரச்சினை ஏற்பட்டு இருப்பது அக்கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
--------------