ஒயின் ஆலைகளை மேம்படுத்த சூப்பர் மார்க்கெட்டுகளில் மதுவை விற்பது நல்ல முடிவு- சரத்பவார் கூறுகிறார்
|பழங்களை அடிப்படையாக கொண்ட ஒயின் ஆலைகளை மேம்படுத்த முந்தைய அரசு சூப்பர் மார்க்கெட்டில் மதுவை விற்கும் நல்ல முடிவை எடுத்ததாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கூறியுள்ளார்.
புனே,
பழங்களை அடிப்படையாக கொண்ட ஒயின் ஆலைகளை மேம்படுத்த முந்தைய அரசு சூப்பர் மார்க்கெட்டில் மதுவை விற்கும் நல்ல முடிவை எடுத்ததாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கூறியுள்ளார்.
மது விற்பனை முடிவு
முந்தைய மகா விகாஸ் அகாடி அரசு மாநிலம் முழுவதும் உள்ள பல்பொருள் அங்காடிகள் மற்றும் கடைகளில் மது விற்பனையை அனுமதிக்கும் முடிவுக்கு அனுமதி அளித்தது.
விவசாயிகளுக்கு கூடுதல் வருமானம் தரும் பழங்கள் சார்ந்த ஒயின் ஆலைகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக மந்திரி ஒருவர் அப்போது தெரிவித்தார். ஆனால் இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை பதிவு செய்தது.
இந்தநிலையில் சமூக ஆர்வலர் ஒருவர் அரசின் இந்த முடிவை எதிர்த்து மும்பை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையில் இருந்த நிலையில் மகா விகாஸ் ஆட்சி கவிழ்ந்தது.
இந்தநிலையில் திராட்சை விவசாயிகள் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் கலந்துகொண்ட தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் பேசியதாவது:-
விவசாயிகள் தற்கொலை
முந்தைய அரசு சூப்பர் மார்க்கெட்டுகளில் மதுவை விற்பனை செய்யும் நல்ல முடிவை எடுத்தது. இது பழங்களை அடிப்படையாக கொண்ட ஒயின் ஆலைகளுக்கு பயனுள்ளதாக அமைந்து இருக்கும். ஆனால் சில காரணங்களால் இதை செய்ய முடியவில்லை.
இந்தியாவில் உற்பத்தியாகும் திராட்சைகளில் 8 சதவீதம் மட்டுமே ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதே நேரம் நாட்டின் சந்தைகளில் 92 சதவீதம் விளைபொருட்கள் உள்நாட்டிலேயே விற்பனை செய்யப்படுகிறது.
எனவே இதில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். உள்ளூர் சந்தைகளை பலப்படுத்துவதன் மூலம் அதிக நிதி வருவாய் கிடைக்கும்.
மராட்டியத்தில் நடக்கும் விவசாயிகளின் தற்கொலை சம்பவங்கள் இதயத்தை வேதனைப்படுத்துகிறது. பொருளாதாரம் ஒழுங்கில்லாமல் இருப்பதால் விவசாயிகள் தங்கள் வாழ்க்கையை முடித்து கொள்கிறார்கள். இதுபோன்ற சம்பவங்களை தடுக்க நாம் ஒன்றாக சிந்திக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.