அதிகார ஆணவத்தை காட்டும் பா.ஜனதாவுக்கு சாமானியர்கள் பாடம் புகட்டுவார்கள்- சரத்பவார் எச்சரிக்கை
|நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இருப்பதால் அதிகார ஆணவத்தை காட்டும் பா.ஜனதாவுக்கு சாதாரண மக்கள் பாடம் புகட்டுவார்கள் என சரத்பவார் எச்சரித்து உள்ளார்.
மும்பை,
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இருப்பதால் அதிகார ஆணவத்தை காட்டும் பா.ஜனதாவுக்கு சாதாரண மக்கள் பாடம் புகட்டுவார்கள் என சரத்பவார் எச்சரித்து உள்ளார்.
அதிகார ஆணவம்
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் மராட்டிய மாநிலம் துலே பகுதியில் கட்சி தொண்டர்கள் மத்தியில் பேசினார். அவர் கூறியதாவது:-
பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தில் சூரியன் மறைவதில்லை என்ற சொல் வழக்கம் உண்டு. ஆனால் அவ்வளவு பெரிய சாம்ராஜ்யம் கூட சாதாரண மக்கள் ஒன்று கூடியதால், அது சிதறிப்போனது. அதே போல நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இருப்பதால், ஆட்சி அதிகார ஆணவத்தை காட்டும் பா.ஜனதாவுக்கு சாதாரண மக்களால் பாடம் புகட்ட முடியும்.
சோனியாவுக்கு ஏதாவது நடந்து இருக்கும்
ஒரு காங்கிரஸ் எம்.பி. ஜனாதிபதி குறித்து தவறாக பேசுகிறார். பின்னர் அதற்காக மன்னிப்பு கேட்கிறார். ஆனால் அதற்கு சோனியா காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என பா.ஜனதா கூறுகிறது. சோனியா காந்தி பா.ஜனதா எம்.பி., மந்திரிகளால் முற்றுகையிடப்படுகிறார். நமது எம்.பி. (சுப்ரியா சுலே) அவரை பத்திரமாக கார் வரை கொண்டு சென்றுவிட்டார். அல்லது அவருக்கு ஏதாவது நடந்து இருக்கும். இது பா.ஜனதாவின் ஆட்சி அதிகார ஆணவம். பா.ஜனதாவுடன் ஒத்து போகவில்லை எனில் அவர்கள் எந்த எல்லைக்கும் செல்வார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.