< Back
மும்பை
சம்பாஜி பிடேவுக்கு எதிராக பேசியதால் கொலை மிரட்டல்; காங்கிரஸ் எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு
மும்பை

சம்பாஜி பிடேவுக்கு எதிராக பேசியதால் கொலை மிரட்டல்; காங்கிரஸ் எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு

தினத்தந்தி
|
31 July 2023 7:45 PM GMT

சம்பாஜி பிடேவுக்கு எதிராக பேசியதற்காக தனக்கு கொலை மிரட்டல் வந்துள்ளதாக காங்கிரஸ் எம்.எல்.ஏ. குற்றம் சாட்டி உள்ளார்.

அமராவதி,

சம்பாஜி பிடேவுக்கு எதிராக பேசியதற்காக தனக்கு கொலை மிரட்டல் வந்துள்ளதாக காங்கிரஸ் எம்.எல்.ஏ. குற்றம் சாட்டி உள்ளார்.

வலைதள பதிவு

இந்து அமைப்பு தலைவரான சம்பாஜி பிடே அமராவதியில் நடந்த நிகழ்ச்சியில் பேசும் போது மகாத்மா காந்தி குறித்து அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. அவரை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் மராட்டியத்தில் பல்வேறு இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. அவரை கைது செய்ய காங்கிரஸ் கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அமராவதி மாவட்டத்தில் உள்ள தியோசா தொகுதி எம்.எல்.ஏ.வான யசோமதி தாக்கூரும், மகாத்மா காந்திக்கு எதிராக அவதூறு கருத்துகளை வெளியிட்ட சம்பாஜி பிடே கைது செய்யப்பட வேண்டும் என்று தனது சமூக வலைதள பக்கத்தில் கூறி இருந்தார். இவரது வலைதள பதிவை வலதுசாரி ஆதரவாளர்கள் பலரும் கடும் வார்த்தைகளால் விமர்சித்து வருகின்றனர்.

அரசு பொறுப்பு

இந்த நிலையில் கைலாஷ் சூர்யவன்சி என்பவர், "சமூக செயல்பாட்டாளர் நரேந்திர தபோல்கருக்கு ஏற்பட்ட கதியை சந்திக்க நேரிடும்" என்று யசோமதி தாக்கூரை எச்சரித்தார். நரேந்திர தபோல்கர் கடந்த 2013-ம் ஆண்டு சுட்டுக்கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் யசோமதி தாக்கூர் எம்.எல்.ஏ. சமூக ஊடகங்களில் தனக்கு மிரட்டல் வருவதை உறுதிப்படுத்தினார். மேலும் அவர் கூறுகையில், "கொலை மிரட்டல்கள் வந்தாலும் சம்பாஜி பிடே குறித்து பேசுவதை நான் நிறுத்தபோவதில்லை. இந்த முழு பிரச்சினைக்கும் பின்னணியில் ஆளும் கூட்டணி அரசு உள்ளது. எனக்கு ஏதேனும் நடந்தால் அதற்கு மாநில உள்துறை தான் பொறுப்பாகும்" என்றார். யசோமதி தாக்கூருக்கு டுவிட்டர் மூலம் மிரட்டல் விடுத்தவருக்கு எதிராக அவரது ஆதரவாளர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

மேலும் செய்திகள்