தானேயில் ஓடும் காரில் தீ; 7 பேர் உயிர் தப்பினர்
|தானேயில் ஓடும் காரில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் காரில் இருந்த 7 பேர் காயமின்றி உயிர் தப்பினர்
தானே,
பன்வெலில் இருந்து தானேக்கு ஒரு குடும்பத்தினர் நேற்று முன் தினம் காரில் சென்றனர். இரவு 10 மணியளவில் கார் மும்ரா நெடுஞ்சாலையில் சென்று கொண்டு இருந்தது. அப்போது திடீரென காரின் முன்பகுதியில் தீப்பிடித்தது. இதனால் பதறிப்போன டிரைவர் காரை உடனடியாக நிறுத்தினார். 2 பெண்கள், 3 குழந்தைகள் உள்பட 7 பேர் காரில் இருந்து அவசர அவசரமாக வெளியே இறங்கினர். அவர்கள் வெளியே வந்த சில நிமிடங்களில் கார் கொழுந்துவிட்டு எரிய தொடங்கியது. தகவல் அறிந்து தீயணைப்பு படையினர் விரைந்து வந்தனர். அவர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து காரில் எரிந்த தீயை அணைத்தனர். ஆனாலும் விபத்தில் கார் முற்றிலும் எரிந்து நாசமானது. எனினும் சரியான நேரத்தில் வெளியே வந்ததால் அதில் பயணம் செய்தவர்கள் காயமின்றி உயிர்தப்பினர். இந்த சம்பவத்தால் மும்ரா நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.