< Back
மும்பை
ரூ.814 கோடி கருப்பு பண வழக்கு: அனில் அம்பானி மீது நடவடிக்கை எடுக்க தடை- கோர்ட்டு உத்தரவு
மும்பை

ரூ.814 கோடி கருப்பு பண வழக்கு: அனில் அம்பானி மீது நடவடிக்கை எடுக்க தடை- கோர்ட்டு உத்தரவு

தினத்தந்தி
|
27 Aug 2022 1:45 AM IST

ரூ.814 கோடி கருப்பு பண விவகாரத்தில் அனில் அம்பானி மீது நவம்பர் 17-ந் தேதி வரை நடவடிக்கை எடுக்க வருமான வரித்துறைக்கு மும்பை ஐகோர்ட்டு தடை விதித்தது.

மும்பை,

ரூ.814 கோடி கருப்பு பண விவகாரத்தில் அனில் அம்பானி மீது நவம்பர் 17-ந் தேதி வரை நடவடிக்கை எடுக்க வருமான வரித்துறைக்கு மும்பை ஐகோர்ட்டு தடை விதித்தது.

சுவீஸ் வங்கியில் ரூ.814 கோடி

வருமான வரித்துறையினர் கடந்த மாதம் 8-ந் தேதி ரிலையன்ஸ் நிறுவன சேர்மன் அனில் அம்பானிக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தனர். அந்த நோட்டீஸ், அனில் அம்பானி வேண்டும் என்றே சுவீஸ் வங்கியில் 2 வங்கி கணக்கில் உள்ள ரூ.814 கோடி பணம் குறித்து வருமான வரித்துறையிடம் மறைத்து, ரூ.420 கோடி வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக கூறியிருந்தனர்.

இந்த விவகாரத்தில் அனில் அம்பானி மீது கருப்பு பண ஒழிப்பு தடுப்பு சட்டம் பிரிவு 50, 51 கீழ் நடவடிக்கை எடுக்க முடியும் எனவும் தெரிவித்து இருந்தனர். இந்த சட்டப்பிரிவுகளின் கீழ் ஒருவருக்கு 10 ஆண்டு ஜெயில், அபராதம் விதிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

நடவடிக்கை எடுக்க தடை

இந்தநிலையில் அனில் அம்பானி அவர் மீதான வருமான வரித்துறை நோட்டீசை எதிர்த்து மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். மனுவை நீதிபதிகள் கங்காபுர்வாலா, ஆர்.என். லத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது அனில் அம்பானி தரப்பில் ஆஜரான வக்கீல், "அனில் அம்பானிக்கு எதிரான சட்டப்பிரிவு 2015-ம் ஆண்டு தான் நடைமுறைக்கு வந்தது. ஆனால் அவர் மேற்கொண்ட பணப்பரிவர்த்தனைகள் 2006-07 மற்றும் 2010-11-ம் ஆண்டு நடந்தவை. எனவே குறிப்பிட்ட சட்டப்பிரிவின் கீழ் அனில் அம்பானி மீது நடவடிக்கை எடுக்க முடியாது" என கூறினார்.

இதுகுறித்து பதில் அளிக்க தங்களுக்கு காலஅவகாசம் வேண்டும் என வருமான வரித்துறை தரப்பில் ஐகோர்ட்டில் கூறப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள் மனு மீதான விசாரணையை நவம்பர் 17-ந் தேதிக்கு ஒத்தி வைத்தனர். மேலும் அதுவரை அனில் அம்பானி மீது நடவடிக்கை எடுக்க வருமான வரித்துறைக்கு இடைக்கால தடை விதித்தனர்.

மேலும் செய்திகள்