
அதிகவட்டி தருவதாக கூறி 146 பேரிடம் ரூ.18 கோடி மோசடி - சென்னையை சேர்ந்தவர் மீது வழக்குப்பதிவு

மும்பையில் அதிகவட்டி தருவதாக கூறி 146 பேரிடம் ரூ.18 கோடி மோசடி செய்ததாக சென்னையை சேர்ந்த வெங்கட்ராமன் கோபாலன் என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்
மும்பை,
சென்னை அசோக்நகரை சேர்ந்தவர் வெங்கட்ராமன் கோபாலன் (வயது54). இவர் மீது மும்பையை சேர்ந்த டாக்டர் ராஜீவ் சர்மா போலீசில் பணமோசடி புகார் அளித்தார். புகார் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், வெங்கட்ராமன் கோபாலன் அதிக வட்டி தருவதாக கூறி 146 பேரிடம் ரூ.17 கோடியே 94 லட்சம் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்து உள்ளது. இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் செய்தித்தாளில் வந்த விளம்பரம் மூலம் வெங்கட்ராமன் கோபாலனை வக்கோலாவில் உள்ள அவரது அலுவலகத்தில் டாக்டர் ராஜீவ் வர்மா சந்தித்து உள்ளார். அப்போது, அவர் தனது நிறுவனத்தில் முதலீடு செய்தால் மாதந்தோறும் 7 முதல் 10 சதவீதம் வரை வட்டி தருவதாக ராஜீவ் சர்மாவிடம் கூறியுள்ளார். இதை நம்பி ராஜீவ் சர்மாவும், அவரது தாயும் ரூ.76 லட்சத்தை அவரது நிறுவனத்தில் முதலீடு செய்து உள்ளனர். முதல் சில மாதங்களுக்கு அவர்களுக்கு சரியாக வட்டியை கொடுத்து உள்ளார். அதன்பிறகு அவர் வட்டி மட்டுமில்லாமல், வாங்கிய பணத்தையும் திரும்பி தரவில்லை. இந்தநிலையில் தான் வெங்கட்ராமன் கோபாலன் அதிகவட்டி தருவதாக கூறி 146 பேரிடம் ரூ.17.94 கோடி மோசடியில் ஈடுபட்டது ராஜீவ் சர்மாவுக்கு தெரியவந்து உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இது குறித்து பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் வெங்கட்ராமன் கோபாலன் மீது மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.