< Back
மும்பை
அரசு வேலை வாங்கி தருவதாக பெண்ணிடம் ரூ.13.48 லட்சம் மோசடி
மாவட்ட செய்திகள்
மும்பை

அரசு வேலை வாங்கி தருவதாக பெண்ணிடம் ரூ.13.48 லட்சம் மோசடி

தினத்தந்தி
|
26 Jun 2022 5:01 PM GMT

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பெண்ணிடம் ரூ.13.48 லட்சம் மோசடி செய்த கும்பலை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

தானே,

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பெண்ணிடம் ரூ.13.48 லட்சம் மோசடி செய்த கும்பலை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

அரசு வேலை

டோம்பிவிலியை சேர்ந்தவர் பல்லவி (வயது34). இவர் கடந்த 2021-ம் ஆண்டு அவரது சகோதரி ராக்கி என்பவர் பிரித்தம் என்ற நபரை பல்லவிக்கு அறிமுகப்படுத்தினார். இதில் பிரித்தம் தனக்கு அரசு அதிகாரிகள் பழக்கம் இருப்பதாகவும், இதனால் உங்களுக்கு அரசு வேலை எளிதாக வாங்கித்தர முடியும் என ஆசை வார்த்தை கூறினார். இதனை நம்பிய பல்லவி தனக்கு அரசு வேலை வாங்கி தரும்படி பிரித்தமிடம் தெரிவித்தார்.

சில நாள் கழித்து பிரித்தம் அவருக்கு அழைப்பு விடுத்து மந்திராலயாவில் அரசு பணிக்கான காலியிடம் இருப்பதாகவும், இதற்காக ரூ.9 லட்சம் செலுத்த வேண்டும் எனவும், முதற்கட்டமாக ரூ.3 லட்சமும், பணி நியமன ஆணை கிடைத்தவுடன் மீதி ரூ.6 லட்சம் தரும்படியும் தெரிவித்தார்.

இதனால் பல்லவி முதலில் ரூ.3 லட்சத்தை அவரது வங்கிக்கணக்கில் செலுத்தினார். பின்னர் மந்திராலயா சென்று தான் தெரிவிக்கும் நபர்களை சந்தித்து பணி நியமன ஆணை பெற்று கொள்ளும்படி பிரித்தம் தெரிவித்தார்.

5 பேருக்கு வலைவீச்சு

இதன்படி பல்லவியை மந்திராலயாவில் இருந்த 4 பேரை சந்தித்து வெவ்வேறு சந்தர்ப்பங்களில் ரூ.13 லட்சத்து 48 ஆயிரம் வரையில் பெற்றனர். இறுதியாக பல்லவிக்கு அவர்கள் பணி நியமன ஆணையை வழங்கினர்.

இதனைத்தொடர்ந்து பல்லவி தனக்கு அவர்கள் கொடுத்த பணி நியமன ஆணையை மந்திராலயா அதிகாரியிடம் காண்பித்து விசாரித்தார். அப்போது அது போலியானது என தெரியவந்தது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பல்லவி போலீசில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் படி போலீசார் நடத்திய விசாரணையில் பல்லவியிடம் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி நடத்தி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மோசடியில் ஈடுபட்ட பிரித்தம் உள்பட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து, அவர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.

மேலும் செய்திகள்