மாவட்ட செய்திகள்
விதான் பவனுக்கு ஒர்லி வழியாக தான் செல்ல வேண்டும்- அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு, ஆதித்ய தாக்கரே எச்சரிக்கை
|விமான நிலையத்தில் இருந்து விதான் பவனுக்கு ஒர்லி வழியாக தான் செல்ல வேண்டும் என அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு ஆதித்ய தாக்கரே எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மும்பை,
விமான நிலையத்தில் இருந்து விதான் பவனுக்கு ஒர்லி வழியாக தான் செல்ல வேண்டும் என அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு ஆதித்ய தாக்கரே எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஆட்சிக்கு ஆபத்து
காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் இருந்து வெளியேற வலியுறுத்தி சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் அசாம் மாநிலம் கவுகாத்தியில் முகாமிட்டுள்ளனர். இதனால் மராட்டியத்தில் சிவசேனா தலைமையிலான ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில் கவுகாத்தி அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் கட்சியின் 3-ல் ஒரு பங்கு பெரும்பான்மை தங்கள் கட்சிக்கு இருப்பதாகவும், சட்டசபையில் தங்கள் பலத்தை நிரூபிப்போம் என்றும் கூறினர். மேலும் தங்கள் குழுவுக்கு சிவசேனா (பாலாசாகேப்) என்று பெயரிட்டு உள்ளனர்.
அதேநேரம் ஏக்நாத் ஷிண்டே உள்பட 16 சிவசேனா எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்க செய்ய கோரி அளித்த புகாரில் வருகிற 27-ந் தேதிக்குள் பதில் அளிக்க கோரி அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.
துரோகிகளுக்கு இடமில்லை...
இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலைக்கு மத்தியில், மந்திரி ஆத்திய தாக்கரே கட்சி தொண்டர்கள் மற்றும் உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் பேசுகையில், "விமான நிலையத்தில் இருந்து விதான் பவனுக்கு செல்லும் சாலை ஒர்லி வழியாக செல்கிறது என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். அதிருப்தியாளர்கள் சிவசேனாவில் இருந்து வெளியேறுவது நல்லது. கட்சியில் துரோகிகளுக்கு ஒருபோதும் இடம் இல்லை" என்றார்.
சிவசேனா கட்சியின் கோட்டையாக கருதப்படும் ஒர்லி மந்திரி ஆதித்ய தாக்கரேவின் சொந்த தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது.