ஏக்நாத் ஷிண்டே அணியின் செயல் மனிதநேயத்துக்கு செய்யப்பட்ட துரோகம்- ஆதித்ய தாக்கரே விமர்சனம்
|ஏக்நாத் ஷிண்டே அணியின் செயல் மனிதநேயத்துக்கு செய்யப்பட்ட துரோகம் என ஆதித்ய தாக்கரே விமர்சித்து உள்ளார்.
மும்பை,
ஏக்நாத் ஷிண்டே அணியின் செயல் மனிதநேயத்துக்கு செய்யப்பட்ட துரோகம் என ஆதித்ய தாக்கரே விமர்சித்து உள்ளார்.
மனிதநேயத்துக்கு துரோகம்
சிவசேனா கட்சி 2 ஆக உடைந்து உள்ள நிலையில், இளைஞர் அணி தலைவர் ஆதித்ய தாக்கரே நேற்று 3 நாள் 'சிவ் சன்வாத்' யாத்திரையை தொடங்கினார். இதில் முதல் நாள் அவர் தானே மாவட்டத்தில் தொண்டர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தி அணியை கடுமையாக விமர்சித்து பேசினார்.
2-வது நாளான இன்று அவர் நாசிக் மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் சிவசேனாவினரை சந்தித்தார். இதில் அவர் மன்மாடு பகுதியில் தொண்டர்கள் மத்தியில் பேசியதாவது:-
அதிருப்தி அணியினர் சிவசேனா, உத்தவ் தாக்கரேவுக்கு துரோகம் செய்யவில்லை. மனிதநேயத்துக்கு செய்து உள்ளனர். அவர்களுக்கு மராட்டியத்தில் கட்சி தலைமைக்கு எதிராக செயல்பட துணிச்சல் இல்லை. எனவே அவர் சூரத், கவுகாத்தி, கோவா சென்றனர். அசாம் வெள்ளத்தில் தத்தளித்த போது, அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் அங்கு தங்களை மகிழ்ச்சிப்படுத்தி கொண்டு இருந்தனர்.
அரசியல் செய்யாதது தவறு
எனது தந்தை உத்தவ் தாக்கரே முதல்-மந்திரியாக இருந்ததால் கட்சி தலைவர்கள், தொண்டர்களை சந்திக்கவில்லை. ஆனால் அவர் முதல்-மந்திரியாக அவரது பணியை நிறுத்தவில்லை. அவர் தொடர்ந்து உழைத்து கொண்டு இருந்தார். தனது எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு எதுவும் கொடுக்கவில்லை எனில் அவர்கள் சென்றுவிடுவார்கள் என அவர் ஒருபோதும் நினைக்கவில்லை. அரசியல் செய்யாதது மட்டும் தான் நாங்கள் செய்த தவறு. அதிருப்தி அணியினர் தற்போது அவர்களின் பலத்தை காட்டுகின்றனர். ஆனால் கடந்த 2½ ஆண்டுகளாக அவர்கள் அதிகாரத்தில் இருந்த போதும் அமைதியாக இருந்தனர்.
உத்தவ் தாக்கரே அறுவை சிகிச்சைக்கு சென்ற போது அவர்கள் பிளவை ஏற்படுத்த திட்டம் போட்டனர். துரோகிகளுக்கு நாங்கள் பதில் சொல்லவேண்டியதில்லை. ஆனால் நாசிக் மாவட்டத்துக்கு மகாவிகாஸ் அகாடி அரசு என்ன செய்தது என்பதை மக்களுக்கு கண்டிப்பாக சொல்வோம். விலகி செல்ல விரும்பியவர்கள் சென்றுவிட்டார்கள், ஆனாலும் காவி கொடி இங்கு பறந்து கொண்டு இருக்கிறது.
சிவசேனா ஒருநாளும் அரசியல் எதிரிகளை அழிக்க நினைத்தது இல்லை. ஆனால் அவர்களுடன் (பா.ஜனதா) சேர்ந்து நமது ஆட்களே நமது கட்சியை அழிக்க முயற்சி செய்கின்றனர்.
அதிருப்தி எம்.எல்.ஏ. கருத்து
இதற்கிடையே ஆதித்ய தாக்கரே சுற்றுப்பயணம் குறித்து அதிருப்தி அணி எம்.எல்.ஏ. குலாப்ராவ் பாட்டீல் கூறுகையில், " ஆதித்ய தாக்கரே முன்பே இதுபோன்ற பயணத்தை மேற்கொண்டு இருந்தால் கட்சி உடைந்து இருக்காது. கட்சி இழந்த பெருமையை மீட்கவே கலகத்தில் ஈடுபட்டோம் " என்றார்.