மும்பைக்கு சிவப்பு எச்சரிக்கை- கடற்கரைகளுக்கு மக்கள் செல்ல தடை
|மும்பையில் 4-வது நாளாக பெய்த பலத்த மழை பெய்த நிலையில் நேற்று மிகவும் பலத்த மழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மும்பை,
மும்பையில் 4-வது நாளாக பெய்த பலத்த மழை பெய்த நிலையில் நாளை மிகவும் பலத்த மழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் கடற்கரைகளுக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.
ரெயில் சேவை பாதிப்பு
மும்பையில் கடந்த மாதம் பருவ மழை தொடங்கியது. இதில் கடந்த 3 நாட்களாக மும்பையில் மழை கொட்டி தீர்த்தது. இந்தநிலையில் 4-வது நாளாக இன்றும் மும்பையில் பலத்த மழை பெய்தது. தொடர் மழை காரணமாக நேற்றும் நகரில் தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மிதந்தன. இதேபோல மழை காரணமாக மஸ்ஜித் அருகே ரெயில் தண்டவாளத்தையொட்டி இருந்த சுவர் இடிந்து விழுந்தது.
இதன் காரணமாக துறைமுக வழித்தடத்தில் சுமார் 15 நிமிடங்கள் ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. இதனால் பயணிகள் அவதி அடைந்தனர்.
மும்பையில் இன்று 4-வது நாளாக 10 செ.மீ.க்கும் அதிகமாக மழை பெய்தது. இதில் கடந்த 24 மணி நேரத்தில் மும்பை நகரில் 8.2 செ.மீ, கிழக்கு புறநகரில் 10.9 செ.மீ, மேற்கு புறநகரில் 10.6 செ.மீ மழையும் பதிவானது.
ஏரிகளின் நீர் மட்டம்
மும்பை மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக ஏரிகளின் நீர் மட்டமும் கிடு, கிடுவென உயர்ந்து உள்ளது. இதில் மும்பைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்மட்டம் 2 லட்சத்து 76 ஆயிரத்து 129 மில்லியன் லட்சம் லிட்டராக உயர்ந்து உள்ளது. இது ஏரிகளின் மொத்த கொள்ளவில் 19.08 சதவீதம் ஆகும். கடந்த ஆண்டு இதே நாளில் 18.44 சதவீதம் நீர் மட்டுமே ஏரிகளில் இருந்தது.
கடந்த ஆண்டை விட முதல் முறையாக இன்று ஏரிகளின் நீர் மட்டம் உயர்ந்து உள்ளது குறிப்பிடத்தக்கது. ஏரிகளின் நீர் மட்டம் உயர்ந்து இருப்பது பொது மக்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நாளை சிவப்பு எச்சரிக்கை
இந்தநிலையில் மும்பை, தானே, பால்கர், ராய்காட் மாவட்டங்களுக்கு நாளை (வெள்ளிக்கிழமை) ரெட் அலர்ட் எனப்படும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் இன்று மிக, மிக பலத்த மழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதேபோல மும்பையில் 40 முதல் 60 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
இந்தநிலையில் ரெட், ஆரஞ்சு அலர்ட் பிறப்பிக்கப்படும் காலங்களில் மும்பையில் உள்ள கடற்கரைகளில் பொது மக்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என மாநகராட்சி தெரிவித்து உள்ளது. இதுகுறித்து மாநகராட்சி பிறப்பித்து உள்ள உத்தரவில், " இந்த ஆண்டு மும்பை கடற்கரைகளில் பலர் மூழ்கிய சம்பவங்கள் நடந்து உள்ளன. எனவே வானிலை ஆய்வு மையம் ரெட், ஆரஞ்சு அலர்ட் விடுக்கும் நாட்களில் காலை 6 மணி முதல், காலை 10 மணி வரை மட்டுமே பொது மக்கள் கடற்கரைக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள். மற்ற நேரங்களில் பொது மக்கள் கடற்கரையில் அனுமதிக்கப்பட மாட்டார்கள் " என கூறப்பட்டுள்ளது.