< Back
மும்பை
எனது படத்தை ஆபாசமாக மார்பிங் செய்துள்ளனர்- போலீசில் ரன்வீர் சிங் வாக்குமூலம்
மும்பை

'எனது படத்தை ஆபாசமாக மார்பிங் செய்துள்ளனர்'- போலீசில் ரன்வீர் சிங் வாக்குமூலம்

தினத்தந்தி
|
15 Sept 2022 6:32 PM IST

‘எனது படத்தை ஆபாசமாக மார்பிங் செய்துள்ளனர்' என போலீசில் நடிகர் ரன்வீர் சிங் வாக்குமூலம் அளித்து உள்ளார்.

மும்பை,

'எனது படத்தை ஆபாசமாக மார்பிங் செய்துள்ளனர்' என போலீசில் நடிகர் ரன்வீர் சிங் வாக்குமூலம் அளித்து உள்ளார்.

ரன்வீர் சிங் ஆபாச படம்

இந்தி நடிகர் ரன்வீர் சிங் கடந்த ஜூலை மாதம் சமூக வலைதள பக்கத்தில் அவரது ஆபாச படங்களை வெளியிட்டு இருந்தார். இது தொடர்பாக தொண்டு நிறுவனம் ஒன்று ரன்வீர் சிங்கிற்கு எதிராக மும்பை செம்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தது. அந்த புகாரில், ரன்வீர் சிங் நிர்வாண படத்தை பகிர்ந்து பெண்களின் உணர்வுகளை காயப்படுத்தி, அவமதித்துவிட்டதாக கூறப்பட்டு இருந்தது.

இந்த புகார் தொடர்பாக செம்பூர் போலீசார் ரன்வீர் சிங் மீது வழக்குப்பதிவு செய்து இருந்தனர். மேலும் விசாரணைக்கு ஆஜராகுமாறு அவருக்கு சம்மன் கொடுத்து இருந்தனர். இதையடுத்து அவர், கடந்த மாதம் 29-ந் தேதி போலீஸ் விசாரணைக்கு ஆஜராகி இருந்தார். அப்போது, அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலம் தற்போது வெளியாகி உள்ளது.

மார்பிங் செய்யப்பட்ட படம்

இது குறித்து ரன்வீர் சிங் போலீசில் கொடுத்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

நான் போட்டோ சூட் நடத்திய போது உள்ளாடை அணிந்து இருந்தேன். எனவே நான் போட்டோ சூட் எடுத்து பகிர்ந்த படங்களில் நிர்வாணமில்லை. இதேபோல அந்தரங்க உறுப்பு தெரிவது போல உள்ள நிர்வாண படம் நான் பதிவேற்றம் செய்தது இல்லை. அது மார்பிங் செய்யப்பட்ட படம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் போட்டோ சூட்டின் போது உள்ளாடையுடன் எடுத்த படங்கள், மார்பிங் செய்யப்பட்டதாக கூறப்படும் நிர்வாண படத்தையும் ரன்வீர் சிங் போலீசாரிடம் ஒப்படைத்து உள்ளார்.

இதையடுத்து போலீசார் ரன்வீர் சிங்கின் நிர்வாண படம் மார்பிங் செய்யப்பட்டதா? என்பதை உறுதி செய்ய அந்த படத்தை தடயவியல் ஆய்வுக்காக அனுப்பி வைத்து உள்ளனர்.

மேலும் செய்திகள்