மணிப்பூரில் கலவர பகுதியில் ஆறுதல் கூறச்சென்ற ராகுல் காந்தி தடுத்து நிறுத்தம் - போராடியவர்கள் மீது கண்ணீர்ப்புகை குண்டு வீச்சு
|மணிப்பூரில் கலவரம் பாதித்த பகுதியில், பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல் கூறச்சென்ற ராகுல் காந்தி தடுத்து நிறுத்தப்பட்டார். இதை எதிர்த்து போராடியவர்களை போலீசார் கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசி விரட்டியடித்தனர்.
இம்பால்,
மணிப்பூரில் கலவரம் பாதித்த பகுதியில், பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல் கூறச்சென்ற ராகுல் காந்தி தடுத்து நிறுத்தப்பட்டார். இதை எதிர்த்து போராடியவர்களை போலீசார் கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசி விரட்டியடித்தனர்.
மணிப்பூரில் கலவரம்
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் முதல்-மந்திரி பிரேன் சிங் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடக்கிறது. அந்த மாநிலம், தற்போது கலவர பூமியாக மாறி உள்ளது. அங்கு பெரும்பான்மை சமூகமாக உள்ள மெய்தி இனத்தினர், தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து சலுகைகள் வழங்க வேண்டும் என்று ஓங்கிக் குரல் கொடுக்கின்றனர். இதை அங்கு பழங்குடி இனத்தவராக உள்ள நாகா, குகி இன மக்கள் தீவிரமாக எதிர்க்கின்றனர். இதனால் அவர்களிடையே கடந்த மே மாதம் 3-ந் தேதி முதல் மோதல் நிலவி வருகிறது.
120 பேர் பலி
மாநிலம் முழுவதும் பரவிய கலவரங்களில். சுமார் 120 பேர் பலியாகி உள்ளனர். 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள், முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள்னர். இதனால் அங்கு அமைதியற்ற சூழல் நிலவுகிறது.
இயல்புநிலையை மீட்டெடுக்க...
இதையொட்டி காங்கிரஸ், ஐக்கிய ஜனதாதளம், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட 10 கட்சிகள் ஒன்றிணைந்து மணிப்பூரின் தற்போதைய நிலைமையை விளக்கும் மனுவை பிரதமர் அலுவலகத்தில் அளித்தனர். அதில், மணிப்பூரின் தற்போதைய நிலைமைக்கு முதல்-மந்திரி பிரேன் சிங்தான் காரணம் என அவர்கள் கூறி உள்ளனர். மேலும் இந்த நெருக்கடிக்கு அவர்தான் பொறுப்பேற்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர். இதற்கிடையே மணிப்பூரில் இயல்புநிலையை மீட்டெடுக்க பிரதமர் மோடி ஒரு ஆலோசனை கூட்டம் நடத்தினார். மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா அனைத்து கட்சி கூட்டம் ஒன்றை நடத்தி விவாதித்தார்.
ராகுல் தடுத்து நிறுத்தம்
இந்த சூழலில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மணிப்பூரில் 2 நாள் பயணம் மேற்கொண்டு பாதிக்கப்பட்டுள்ள மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற விரும்பினார். இதற்காக அவர் நேற்று தலைநகர் இம்பாலுக்கு வந்தார். அங்கிருந்து அவர் கலவரம் பாதித்த சுரக்சந்த்பூருக்கு சாலை வழியாக புறப்பட்டார். அவர் வாகன அணிவகுப்புடன் சென்று கொண்டிருந்தபோது, இம்பாலில் இருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ள பிஷ்ணுப்பூர் என்ற இடத்தில் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டார். அவர் அங்கு பல மணி நேரம் நிற்கும் நிலை ஏற்பட்டது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
போலீஸ் சொல்வது என்ன?
இதுபற்றி போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், "ராகுல் காந்தி செல்லும் வழியில் வன்முறை ஏற்படலாம் என்ற அச்சத்தில்தான் தடுத்து நிறுத்தினோம். பிஷ்ணுப்பூர் மாவட்டத்தில் உட்லோ கிராமத்துக்கு அருகே நெடுஞ்சாலையில் டயர்கள் தீயிட்டுக்கொளுத்தப்பட்டுள்ளன. வாகன அணிவகுப்பின் மீது கற்களும் வீசப்பட்டுள்ளன" என தெரிவித்தார். இதுபற்றி மேலும் ஒரு போலீஸ் அதிகாரி கூறும்போது, "இத்தகைய சம்பவங்கள் மேலும் நடக்கலாம் என அஞ்சுகிறோம். எனவேதான் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக பிஷ்ணுப்பூரில் வாகன அணிவகுப்பை நிறுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளோம்" என குறிப்பிட்டார். மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, "பாதுகாப்பு அசசுறுத்தல் உள்ளது. ராகுல் காந்தி தொடர்ந்து செல்ல அனுமதித்து நாங்கள் ஆபத்துக்கு வழிநடத்த முடியாது" என தெரிவித்தார்.
காங்கிரஸ் கண்டனம்
ஆனால் ராகுல் காந்தி தடுத்து நிறுத்தப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுபற்றி அந்த கட்சியின் தலைவர் கார்கே டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டார். அதில் அவர், "மத்தியிலும், மாநிலத்திலும் உள்ள இரட்டை என்ஜின் பேரழிவு அரசுகள், கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ராகுல் காந்தி ஆறுதல் கூறச்செல்வதை சர்வாதிகார முறைகளைப் பயன்படுத்தி தடுத்துவிட்டன. இது முற்றிலும் ஏற்கத்தக்கது அல்ல. இது அரசியல் சாசனத்தின் அனைத்து நெறிமுறைகளையும் நொறுக்கிவிட்டது" என கூறி உள்ளார். மணிப்பூர் மாநில காங் கிரஸ் கட்சி தலைவர் கெய்ஷாம் மேகசந்திரா கூறும்போது, "எல்லோரும் ராகுலை வரவேற்பதால், அவரை தடுத்து நிறுத்துவதற்கான உத்தரவு முதல்-மந்திரி பிரென் சிங்கிடம் இருந்து வந்துள்ளது" என குற்றம் சாட்டினார். இதேபோன்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கருத்து தெரிவிக்கையில், "மணிப்பூரில் ராகுலின் 2 நாள் பயணம், இந்திய ஒற்றுமை யாத்திரையின் உணர்வினால் வந்ததாகும். பிரதமர் மவுனமாக இருப்பதை அல்லது செயலற்று இருப்பதை தேர்வு செய்திருக்கலாம். ஆனால் மணிப்பூர் சமூகத்தின் பல தரப்பு மக்கள் கூறுவதை கேட்டு ஆறுதல் கூறும் முயற்சியில் இருந்து ராகுல் காந்தியை ஏன் தடுத்து நிறுத்த வேண்டும்?" என கேட்டார். ராகுல் தடுத்து நிறுத்தப்பட்டதற்கு திரிணாமுல் காங்கிரசும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுபற்றி அந்த கட்சியின் மூத்த தலைவர் டெரிக் ஓ பிரையன் எம்.பி. கூறும்போது, "மோடி, அமித்ஷா ஆகியோரின் பா.ஜ.க. விரக்தியில் உள்ளது. ஒரு மாதத்துக்கு முன்னர் மம்தா பானர்ஜி மணிப்பூர் செல்ல அனுமதி கேட்டார். அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஒரு மாதமான நிலையில் இப்போது ராகுலுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இது நிச்சயமாக பா.ஜ.க. அரசின் கடைசி 300 நாட்கள்தான்" என தெரிவித்தார்.
கண்ணீர்ப்புகை குண்டு வீச்சு
ஆனால் பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா இதுபற்றி கருத்து தெரிவிக்கையில், "ராகுல் காந்தியின் மணிப்பூர் பயணத்துக்கு பல்வேறு சமூக அமைப்புகளும், மாணவர் சங்கங்களும் கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கின்றன. இதை மனதில் வைத்து, ராகுல் காந்தி சுரக்சந்த்பூருக்கு ஹெலிகாப்டரில் செல்லுமாறு நிர்வாகம் கேட்டுக்கொண்டது. அரசியல் ஆதாயத்துக்காக அடம் பிடிப்பதைவிட பதற்றமான சூழலை புரிந்துகொள்வது என்பது மிகவும் முக்கியம்" என தெரிவித்தார். ராகுல் காந்தி சுரக்சந்த்பூருக்கு செல்வதை அனுமதிக்க கோரி, அந்த பகுதியைச் சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்கள் மீது கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசி போலீசார் விரட்டியடித்தனர். இதனால் பதற்றமான சூழல் நிலவியது.
ஹெலிகாப்டரில் சென்று ஆறுதல்
பல மணி நேர போராட்டத்துக்கு பின்னர், ராகுல் காந்தி அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் சுரக்சந்த்பூருக்கு புறப்பட்டுச்சென்றார். அவருக்கு ஹெலிகாப்டரை மாநில அரசே வழங்கியதாகவும், அவருடன் உயர் போலீஸ் அதிகாரிகளும், அரசு அதிகாரிகளும் சென்றதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சுரக்சந்த்பூரில் ஒரு பள்ளியில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களை ராகுல் காந்தி சந்தித்து பேசினார். அவர்கள் கூறியதை அவர் கவனமுடன் கேட்டதுடன் அவர்களுக்கு ஆறுதல் கூறி தேற்றினார். அங்குள்ள குழந்தைகளோடு அவர் மதிய உணவு சாப்பிட்டார் என தகவல்கள் கூறுகின்றன.