நிர்வாண புகைப்பட வழக்கு : நடிகர் ரன்வீர் சிங்கிடம் போலீஸ் விசாரணை
|நிர்வாண புகைப்பட வழக்கு தொடர்பாக நேற்று நடிகர் ரன்வீர் சிங்கிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
மும்பை,
நிர்வாண புகைப்பட வழக்கு தொடர்பாக நேற்று நடிகர் ரன்வீர் சிங்கிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
நிர்வாண புகைப்பட வழக்கு
பிரபல இந்தி நடிகர் ரன்வீர் சிங். இவர் பாஜிராவ் மஸ்தானி, பத்மாவத், கல்லி பாய் உள்ளிட்ட பல படங்களில் நடித்து உள்ளார். இவர் கடந்த மாதம் சமூகவலைதளத்தில் அவரது நிர்வாண புகைப்படத்தை பதிவிட்டு அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தினார். இது தொடர்பாக தொண்டு நிறுவனம் ஒன்று மும்பை செம்பூர் போலீசில் புகார் அளித்தது. அந்த புகாரில், நடிகர் ரன்வீர் சிங் நிர்வாண படத்தை வெளியிட்டு பெண்களை அவமதித்து, அவா்களின் உணர்வுகளை புண்படுத்திவிட்டதாக கூறப்பட்டு இருந்தது.
இந்த புகாா் தொடர்பாக போலீசார் பெண்களை அவமதித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
2½ மணி நேரம் விசாரணை
மேலும் வழக்கு தொடர்பாக நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்க ரன்வீர் சிங்கிற்கு போலீசார் சம்மன் வழங்கி இருந்தனர். இந்தநிலையில் ரன்வீர் சிங் நிர்வாண புகைப்படம் வழக்கு தொடர்பான விசாரணைக்கு நேற்று செம்பூர் போலீஸ் நிலையத்தில் ஆஜரானார். அவர் காலை 7 மணியளவில் விசாரணை அதிகாரி முன் ஆஜரானார். அதிகாரிகள் வழக்கு தொடர்பான அவரது வாக்குமூலத்தை பதிவு செய்தனர்.
இதில் விசாரணை முடிந்து காலை 9.30 மணியளவில் அவர் போலீஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றார். தேவைப்பட்டால் விசாரணைக்காக ரன்வீர்சிங் மீண்டும் அழைக்கப்படுவார் என போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.