மராட்டியத்தில் பெட்ரோல் ரூ.5, டீசல் ரூ.3 விலை குறைப்பு
|மராட்டியத்தில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.5-ம், டீசல் ரூ.3-ம் விலை குறைக்கப்பட்டுள்ளதாக முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே அறிவித்து உள்ளார்.
மும்பை,
மராட்டியத்தில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.5-ம், டீசல் ரூ.3-ம் விலை குறைக்கப்பட்டுள்ளதாக முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே அறிவித்து உள்ளார்.
மராட்டியம் குறைக்கவில்லை
ரஷ்யா- உக்ரைன் போர் காரணமாக கச்சா எண்ணை விலை உயர்ந்தது. இதன் எதிரொலியாக இந்தியாவிலும் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் அதிகரித்தது. இதன் காரணமாக சாமானிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
இந்தநிலையில் கடந்த மே மாதம் பெட்ரோல், டீசலுக்கான வரியை மத்திய அரசு குறைத்தது. இதையடுத்து பெட்ரோல் லிட்டருக்கு ரூ.8-ம், டீசலுக்கு ரூ.6-ம் குறைந்தது. இதேபோல பா.ஜனதா ஆட்சி செய்யும் மாநிலங்களும் வரியை குறைத்தன. இதன் காரணமாக அந்த மாநிலங்களிலும் மேலும் பெட்ரோல், டீசல் விலை குறைந்தது. ஆனால் மராட்டியத்தில் மகா விகாஸ் கூட்டணி அரசு பெட்ரோல், டீசலுக்கான வாியை குறைக்கவில்லை.
இந்தநிலையில் மராட்டியத்தில் மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தி சிவசேனா எம்.எல்.ஏ.க்கள், மகா விகாஸ் கூட்டணி அரசுக்கு எதிராக திரும்பினர். இதனை தொடர்ந்து முதல்-மந்திரி பதவியில் இருந்து உத்தவ் தாக்கரே விலகினார். இதன்பின்னர், பா.ஜ.க. ஆதரவுடன் ஏக்நாத் ஷிண்டே கடந்த ஜூன் 30-ந்தேதி முதல்-மந்திரியாக பதவியேற்று கொண்டார். பா.ஜ.க. முன்னாள் முதல்-மந்திரி பட்னாவிஸ் துணை முதல்-மந்திரி ஆகியுள்ளார்.
பெட்ரோல், டீசல் விலை குறைப்பு
இந்தநிலையில் இன்று நடந்த மந்திரி சபை கூட்டத்தில் மராட்டியத்தில் பெட்ரோல், டீசலுக்கான மதிப்பு கூட்டு வரியை (வாட்) குறைப்பது என முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து மாநிலத்தில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.5-ம், டீசல் ரூ.3-ம் குறைக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே கூறினார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், மத்திய அரசு கடந்த ஆண்டு நவம்பர் 4, கடந்த மே 22-ந் தேதி வாட் வரியை குறைத்தது. பிரதமர் மோடி மாநில அரசையும் வரியை குறைக்குமாறு கேட்டுக்கொண்டார். ஆனால் முந்தைய மகாவிகாஸ் அகாடி அரசு மத்திய அரசின் கோரிக்கைக்கு செவி சாய்க்கவில்லை.
நாங்கள் மாநிலத்தின் நிதிநிலையை ஆய்வு செய்து பெட்ரோல், டீசலுக்கான வாட் வரியை குறைக்க முடிவு செய்தோம். இந்த விலை குறைப்பின் மூலம் அரசுக்கு ரூ.6 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்படும், என்றார்.
துணை-முதல் மந்திரி
இது குறித்து துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், மராத்தியர்கள், மராட்டிய மக்களுக்கு பெரிய நிவாரணம். முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான புதிய அரசு பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.5, டீசலுக்கு ரூ.3-யும் குறைக்க முடிவு செய்து இருக்கும் செய்தி அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
பிரதமர் மோடி பொதுமக்கள் நலன் கருதி கேட்டு கொண்டதன் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.
மக்களுக்கு நிவாரணம்
மும்பையில் பெட்ரோல் விலை கடந்த 11 நாட்களாக ரூ.111.35 ஆக இருந்தது. தற்போது ரூ.106.35 ஆக குறைந்து உள்ளது. அதேபோல டீசல் விலை ரூ.97.28-ல் இருந்து ரூ.94.28 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
இந்த விலை குறைப்பு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.
பெட்ரோல் டீசல் விலை உயர்வில் இருந்து மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், மராட்டியத்தில் பெட்ரோல், டீசல் விலையை குறைத்து முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே அறிவித்துள்ளார்.
---------------