மாவட்ட செய்திகள்
மராட்டியத்தில் பெட்ரோல், டீசல் விலை அதிகம்- மத்திய மந்திரி ராவ்சாகேப் தன்வே
|அண்டை மாநிலங்களை காட்டிலும் மராட்டியத்தில் பெட்ரோல், டீசல் விலை அதிகம் என்று மத்திய மந்திரி ராவ்சாகேப் தன்வே கூறினார்
அவுரங்காபாத்,
அண்டை மாநிலங்களை காட்டிலும் மராட்டியத்தில் பெட்ரோல், டீசல் விலை அதிகம் என்று மத்திய மந்திரி ராவ்சாகேப் தன்வே கூறினார்.
வரி குறைப்பு
மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியில் லிட்டருக்கு ரூ.8-ம், டீசல் மீதான வரி ரூ.6-ம் குறைத்து அறிவித்து. இந்நிலையில் பெட்ரோல் மீதான மாநில அரசின் வரியை குறைக்க வேண்டும் என பா.ஜனதா கட்சியை சேர்ந்த மத்திய மந்திரி ராவ்சாகேப் தன்வே வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
மோடி வேண்டுகோள்
பெட்ரோல், டீசல் மற்றும் இயற்கை எரிவாயு விலைகள் சர்வதேச சந்தை விலையுடன் இணைக்கப்பட்டு உள்ளது. இதனை தீர்மானிக்க எந்த மாநில அரசுக்கும் உரிமை இல்லை. தற்போது நடைபெறும் ரஷியா- உக்ரைன் போரின் தாக்கமும் விலை உயர்வுக்கு காரணமாக உள்ளது. இருப்பினும் மத்திய அரசு 2 முறை எரிபொருளின் விலையை குறைத்துள்ளது.
எரிபொருள் மீதான வரியை குறைக்குமாறு மாநிலங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆனால் மராட்டிய அரசு அவ்வாறு செய்யவில்லை.
மராட்டியத்தில் விலை அதிகம்
வரிகளை குறைப்பதற்கு பதிலான மாநில அரசு, மத்திய அரசை நோக்கி விரல் நீட்டுகிறது. இப்போது கியாஸ் விலையை குறைக்க கோருகிறது. மாநில அரசு தனது வரிகளை குறைத்து சாமானிய மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். அண்டை மாநிலங்களான கர்நாடகா, கோவா மற்றும் குஜராத்தை விட மராட்டியத்தில் பெட்ரோல், டீசல் விலை அதிகமாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
சிவசேனா தலைமையிலான மகா விகாஸ் அகாடி அரசு ஒரு லிட்டர் பெட்ரோல் மீதான மதிப்பு கூட்டு வரியை(வாட்) ரூ.2.08-ம், டீசலுக்கு ரூ.1.44-ம் குறைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இந்த வரி குறைப்பு போதாது என பா.ஜனதா கூறி வருவது குறிப்பிடத்தக்கது.
-------