நிலச்சரிவு அபாய பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்படுவார்கள் - சட்டசபையில் முதல்-மந்திரி ஷிண்டே பேச்சு
|நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்படுவார்கள் என முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே கூறியுள்ளார்.
மும்பை,
நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்படுவார்கள் என முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே கூறியுள்ளார்.
பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றம்
ராய்காட் மாவட்டம் காலாப்பூர் தாலுகாவில் உள்ள இர்சல்வாடி மலைக்கிராமத்தில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் இதுவரை 22 பேர் பிணமாக மீட்கப்பட்டு உள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக நேற்று முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே சட்டசபையில் பேசியதாவது:- மாநிலத்தில் நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களை வேறு இடத்துக்கு மாற்றுவது என மந்திரி சபை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்படும். நிரந்தரமாக தங்க பாதுகாப்பான இடத்துக்கு மாற்றப்படுவார்கள். இதற்கு முன் ராய்காட், ரத்னகிரி, கோலாப்பூரில் நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டார்கள். இனிமேல் மாநிலம் முழுவதும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
உடனடியாக வீடு கட்டிகொடுக்கப்படும்
இர்சல்வாடியில் மீட்கப்பட்ட மக்கள் முதலில் பள்ளி கட்டிடத்தில் தங்க வைக்கப்பட்டனர். தற்போது அவர்கள் தங்க 60 தற்காலிக கூடாரங்கள் (கண்டெய்னர்) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்படும் வரை அங்கு தங்குவார்கள். அவர்கள் தங்குவதற்கான இடம் முடிவு செய்யப்பட்டுள்ளது. அங்கு உடனடியாக அவர்களுக்கு வீடு கட்டி கொடுக்க சிட்கோவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.