< Back
மும்பை
உணவு பாதுகாப்பு விதிகளை மீறிய 15 ஓட்டல்களை மூட உத்தரவு - அதிகாரிகள் நடவடிக்கை
மும்பை

உணவு பாதுகாப்பு விதிகளை மீறிய 15 ஓட்டல்களை மூட உத்தரவு - அதிகாரிகள் நடவடிக்கை

தினத்தந்தி
|
18 Oct 2023 12:30 AM IST

உணவு பாதுகாப்பு விதிமுறைகளை மீறிய 131 ஓட்டல்களுக்கு நோட்டீஸ் அனுப்பியும், 15 ஓட்டல்களை மூடவும் அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.

மும்பை,

உணவு பாதுகாப்பு விதிமுறைகளை மீறிய 131 ஓட்டல்களுக்கு நோட்டீஸ் அனுப்பியும், 15 ஓட்டல்களை மூடவும் அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.

அதிரடி சோதனை

மும்பையில் உள்ள ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு விதிமுறைகளை மீறி உணவு தயாரிக்கப்படுவதாக அதிகாரிகளுக்கு புகார் வந்தது. இந்த புகாரின்பேரில் மும்பையில் உள்ள ஓட்டல்களில் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வந்தனர். இந்த சோதனையில் விதிமுறைகளை மீறி ஓட்டல்கள் செயல்பட்டு வந்தது தெரியவந்தது. இது பற்றி உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை இணை கமிஷனர் சைலேஷ் ஆதவ் கூறியதாவது:- கடந்த 2 மாதங்களாக மும்பை மாநகர் முழுவதும் உள்ள 152 ஓட்டல்களில் திடீர் சோதனை நடத்தினோம். இந்த சோதனையில் உணவு பாதுகாப்பு விதிமுறையை மீறியதாக 131 ஓட்டல்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. மேலும் 15 ஓட்டல்களுக்கு உணவு தயாரிப்பதை நிறுத்துமாறும் அல்லது ஓட்டலை இழுத்து மூடுமாறும் உத்தரவிடப்பட்டது. மும்பையில் உள்ள பெரும்பாலான ஓட்டல்களில் சுத்தம் இல்லாமல் இருப்பதை கவனித்தோம். அழுக்கு படிந்த சமையல் அறைகள், திறந்த வெளியில் குப்பை தொட்டிகள், கெட்டுப்போன உணவுகள் போன்றவற்றை கண்டுபிடித்தோம். ஊழியர்கள் தொப்பிகள், கையுறைகள் இல்லாமல் வேலை செய்து வந்தனர்.

15 ஓட்டல்களை மூட உத்தரவு

இது உணவு மற்றும் மருந்து நிர்வாகத் துறையின் சட்டவிதிகளுக்கு எதிரானது. மூட உத்தரவிட்ட 15 ஓட்டல்களும் உயர்தரமான ஓட்டல்கள் ஆகும். பூச்சி கட்டுப்பாட்டு சான்றிதழ், மருத்துவ சான்றிதழ்கள் மற்றும் தணிக்கையை புதுப்பிக்காமல் விதிமுறைகளை மீறியதும் தெரியவந்தது. இவ்வாறு அவர் கூறினார். ஏற்கனவே பாந்திராவில் உள்ள ஓட்டலில் வழங்கப்பட்ட உணவில் எலிக்குட்டி செத்து கிடந்தது தொடர்பாக வாடிக்கையாளர் அளித்த புகாரின்பேரில் அந்த ஓட்டலின் மேலாளர், 2 சமையல்காரர்கள் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்