தொடரும் தற்கொலை முயற்சிகள்; மந்திராலயாவில் பார்வையாளர்களுக்கு கடும் விதிமுறைகள் - உள்துறை அமைச்சகம் அதிரடி
|மந்திராலயாவில் பார்வையாளர்களுக்கு கடும் விதிமுறைகளை அரசின் உள்துறை அமைச்சகம் விதித்துள்ளது.
மும்பை,
மந்திராலயாவில் பார்வையாளர்களுக்கு கடும் விதிமுறைகளை அரசின் உள்துறை அமைச்சகம் விதித்துள்ளது.
தற்கொலை முயற்சி
மராட்டிய அரசின் தலைமை செயலகமான மந்திராலயா கட்டிடத்தில் இருந்து குதித்து பலர் தற்கொலைக்கு முயன்ற சம்பவங்கள் நடந்தன. இதுபோன்ற சம்பவங்களை தடுக்க மந்திராலயா கட்டிடத்தில் பாதுகாப்பு வலை போடப்பட்டது. இருப்பினும் போராட்டக்காரர்கள் தங்களது எதிர்ப்பை பதிவு செய்ய கட்டிட மாடிகளில் இருந்து வலையில் குதிக்கின்றனர். கடந்த மாதம் கூட விதர்பாவை சேர்ந்த விவசாயிகளின் ஒரு குழுவினர் நீர்ப்பாசன திட்டத்திற்காக கையகப்படுத்தப்பட்ட தங்களின் நிலத்திற்கு இழப்பீடு வழங்க கோரி, மந்திராலயா மாடியில் இருந்து வலையில் குதித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று முன்தினமும் ஒருவர் வலையில் குதித்து போராட்டம் செய்தார். இந்தநிலையில் மராட்டிய உள்துறை அமைச்சகம் மந்திராலயாவுக்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த கடுமையான விதிமுறைகளை விதித்துள்ளது. இதுகுறித்த உத்தரவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
எத்தனை பார்வையாளர்கள்
மந்திராலயாவுக்கு அதிக அளவில் மக்கள் வருவதால் தினசரி நிர்வாக பணிகள் பாதிக்கப்படுகின்றன. மந்திராலயாவுக்கு ஒரு நாளைக்கு எத்தனை பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்பது குறித்த அறிக்கையை ஒரு மாதத்திற்குள் மந்திராலயாவின் பாதுகாப்பு துணை கமிஷனர் தெரிவிக்கவேண்டும். மந்திராலயாவுக்கு வருகை தரும் மக்கள் நுழைவு சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள துறையை தவிர வேறு துறைகளில் அல்லது வேறு தளங்களில் சுற்றித்திரிய அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
நவீன பிளாசா
மந்திராலயாவின் கார்டன் கேட் அருகே பார்வையாளர்களுக்கான நவீன பிளாசா ஒன்று கட்டப்படும், அதில் பாஸ் கவுண்டர், காத்திருப்பு அறை, பேக் லாக்கர்கள் மற்றும் ஸ்கேனர்கள் போன்றவை இருக்கும். பால்கனிகள் மற்றும் ஜன்னல்களில் திறந்த வெளிகளில் கண்ணுக்கு தெரியாத இரும்பு கயிறுகள் நிறுவப்படும், மேலும் வளாகத்தில் நுழையும் பார்வையாளர்கள் ரூ.10 ஆயிரத்துக்கு மேல் பணத்தை எடுத்து செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.