உப்பு குழியில் புதைக்கப்பட்ட இளம்பெண்ணின் மரணத்தில் மர்மம்- மறுபிரேத பரிசோதனையில் அம்பலம்
|உப்பு குழியில் புதைக்கப்பட்ட இளம்பெண்ணின் மரணத்தில் மர்மம் இருப்பது மறுபிரேத பரிசோதனையில் அம்பலமாகி உள்ளது.
மும்பை,
உப்பு குழியில் புதைக்கப்பட்ட இளம்பெண்ணின் மரணத்தில் மர்மம் இருப்பது மறுபிரேத பரிசோதனையில் அம்பலமாகி உள்ளது.
உப்பு குழியில் பெண் உடல்
மராட்டிய மாநிலம் நந்துா்பூர், தாட்காவ் தாலுகா வாவி கிராமத்தில் கடந்த மாதம் 1-ந் தேதி 21 வயது பழங்குடியின பெண் ஒருவர் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். போலீசார் பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் பிரேத பரிசோதனையை அறிக்கையை வைத்து பெண் தற்கொலை செய்ததாக வழக்குப்பதிவு செய்தனர்.
இந்தநிலையில் பெண்ணின் தந்தை தனது மகள் 4 பேர் கும்பலால் கற்பழிக்கப்பட்டு பின்னர் கொலை செய்யப்பட்டதாக குற்றம்சாட்டினார். மேலும் அவர் மகளின் உடலை மீண்டும் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என வலியுறுத்தி உப்பால் நிரப்பப்பட்ட குழியில் புதைத்தார். இதுகுறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் இளம்பெண்ணின் உடலை மறுபிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட்டனர்.
ஒரு கையால் தூக்குப்போட்டது எப்படி?
இதையடுத்து 44 நாட்களுக்கு பிறகு பெண்ணின் உடல் உப்பு குழியில் இருந்து எடுக்கப்பட்டு மறுபிரேத பரிசோதனைக்காக மும்பை ஜே.ஜே. ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டது.
நேற்று முன்தினம் பெண்ணின் உடலை டாக்டர்கள் குழுவினர் மீண்டும் பிரேத பரிசோதனை செய்தனர்.
அப்போது பெண்ணின் மரணத்தில் மர்மம் இருப்பது அம்பலமாகியது. குறிப்பாக பெண்ணின் கழுத்தில் தடம் இருந்தது தெரியவந்து உள்ளது. இதேபோல வலது கை செயல்படாத பெண், எப்படி ஒரு கையால் தூக்குப்போட்டு கொண்டார் என்ற கேள்வியையும் டாக்டர்கள் எழுப்பி உள்ளனர்.
மேலும் இதுகுறித்து டாக்டர் ஒருவர் கூறுகையில், " போலீசார் சந்தேகம் எழும் இடங்கள் குறித்து விரிவாக விசாரித்து இருக்க வேண்டும். ஒரு கையால், ஒருவரால் கயிறை கட்டி தற்கொலை செய்து கொள்ள முடியுமா என்பதை எளிதில் கூறிவிடலாம். மரணத்தில் மர்மம் உள்ளதில் எந்த சந்தேகமும் இல்லை. இருப்பினும் விரிவான பிரேத பரிசோதனை அறிக்கையில் உண்மை நிலவரம் தெரியவரும்" என்றார்.
கற்பழிக்கப்பட்டாரா?
அதே நேரத்தில் பெண்ணின் உடல் பிளாஸ்டிக் பேப்பரில் சுற்றில், உப்பு குழியில் வைக்கப்பட்ட போதும் பாதி அழுகி இருந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாரா என்பதை கண்டறியமுடியவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன.
பெண்ணின் மரணத்தில் மர்மம் இருப்பது தெரியவந்தது குறித்து மாநில சட்ட ஒழுங்கு ஐ.ஜி. மிலிந்த் பரம்பே கூறுகையில், " ஜே.ஜே. ஆஸ்பத்திரியில் நடந்த பிரேத பரிசோதனை மூலம் விசாரணைக்கு தேவையான புதிய தகவல்கள் கிடைத்து உள்ளன. இந்த வழக்கில் ஏற்கனவே 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பெண்ணின் வலது கை ஊனம் பற்றி முதல் பிரேத பரிசோதனையின் போது எங்களுக்கு எதுவும் கூறப்படவில்லை" என்றார்,