மும்பை, புனேயில் ஓரிரு நாட்களில் பருவமழை விடைபெறும்; வானிலை ஆய்வு மையம் தகவல்
|மும்பை, புனேயில் ஓரிரு நாட்களில் தென்மேற்கு பருவமழை விடைபெறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
மும்பை,
மும்பை, புனேயில் ஓரிரு நாட்களில் தென்மேற்கு பருவமழை விடைபெறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
பருவமழை
மும்பையில் எப்போதும் ஜூன் மாத தொடக்கத்திலேயே பருவமழை தொடங்குவது வழக்கம். ஆனால் வழக்கத்துக்கு மாறாக மும்பையில் நடப்பு ஆண்டு தென்மேற்கு பருவமழை கடந்த ஜூன் மாத இறுதியில் தான் தொடங்கியது பருவமழை தொடங்க தாமதமானதால் மும்பைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர் இருப்பு வேகமாக குறைய தொடங்கியது. இதன் காரணமாக மும்பையில் குடிநீர் வினியோகம் 10 சதவீதம் குறைக்கப்பட்டது. இருப்பினும் ஜூலை மாதத்தில் பருவமழை தீவிரமடைந்தது. தொடர் மழையால் குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர் இருப்பு படிப்படியாக அதிகரித்தது. ஜூலை மாதத்தில் மட்டும் வழக்கமாக மழைக்காலத்தில் பதிவாகும் சராசரி மழையில் 3-இல் 2 பங்கு மழை பதிவானது.
விடைபெறுகிறது
இதனை தொடர்ந்து ஆகஸ்ட் மாதத்தில் வறண்ட காலநிலையே நிலவி ஏமாற்றம் அளித்தது. ஒரு மாத கால இடைவெளிக்கு பின்னர் கடந்த மாதம் பெய்த மழை மும்பைக்கு தேவையான மழையை கொடுத்தது. இந்த நிலையில் மும்பை, புனே, நாக்பூர் ஆகிய இடங்களில் ஓரிரு நாட்களில் தென்மேற்கு பருவமழை விடைபெற உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து உள்ளது. இது பற்றி வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறுகையில், " பருவமழை 2 அல்லது 3 நாட்களில் முற்றிலும் நிறைவு பெறுகிறது. இருப்பினும் தெற்கு கொங்கன், கோவா, ரத்னகிரி மற்றும் சிந்தூர்க் ஆகிய பகுதிகளில் பருவமழைக்கு சாதகமான சூழ்நிலை நிலவி வருகிறது. அங்கும் ஓரிரு நாட்களில் பருவமழை படிப்படியாக குறையத்தொடங்கும். மராட்டியத்தின் பிற பகுதிகளிலும் 45 சதவீதம் பருவமழை விடை பெற்றுவிட்டது" என்றார்.