நவிமும்பையில் சிறுமியை விபசாரத்தில் ஈடுபடுத்த முயன்ற தாய், ஏஜெண்ட் கைது
|நவிமும்பையில் சிறுமியை விபசாரத்தில் ஈடுபடுத்த முயன்ற தாய் மற்றும் ஏஜெண்டை போலீசார் கைது செய்தனர்
மும்பை,
நவிமும்பை துர்பே பகுதியில் சோனு என்ற ஏஜெண்ட் விபசாரத்திற்காக சிறுமியை விற்க இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் போலி வாடிக்கையாளரை அவரிடம் அனுப்பி விசாரித்தனர். அப்போது, எஜெண்ட் சோனு போலி வாடிக்கையாளரிடம் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் பேரம் பேசி விபசாரத்திற்காக சிறுமியை மகாபே எம்.ஐ.டி.சி. பகுதிக்கு கடந்த 23-ந்தேதி மாலை அனுப்பி வைப்பதாக தெரிவித்தார். இதன்படி போலீசார் அப்பகுதியில் கண்காணித்து வந்தனர். அப்போது 43 வயதுடைய பெண் மற்றும் 17 வயது சிறுமியை ஏஜெண்ட் சோனு அழைத்து வந்ததை கண்டனர். அங்குள்ள லாட்ஜ்க்கு சென்றபோது போலீசார் விரைந்து சென்று ஏஜெண்ட் சோனு மற்றும் அப்பெண்ணை பிடித்து விசாரித்தனர். இதில், பிடிபட்ட பெண் சிறுமியின் தாய் என தெரியவந்தது. மேலும் கோபர்கைர்னேவை சேர்ந்த அப்பெண் குடும்பத்தை நடத்த போதுமான வருமானம் இல்லாததால் ஏஜெண்ட் சோனுவிடம் சிறுமியை விபசாரத்தில் ஈடுபடுத்தி பணம் சம்பாதிக்க முயன்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் விபசார ஏஜெண்ட் சோனு மற்றும் சிறுமியின் தாயை கைது செய்தனர். மேலும் சிறுமியை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.