
திரைப்படங்களுக்கு ரேட்டிங் வழங்கினால் பணம் - டாக்டரிடம் ரூ.1 கோடி நூதன மோசடி

திரைப்படங்களுக்கு ரேட்டிங் வழங்கி பணம் சம்பாதிக்கலாம் என டாக்டரிடம் நூதன முறையில் ரூ.1 கோடி மோசடியில் ஈடுபட்டவர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
மும்பை,
திரைப்படங்களுக்கு ரேட்டிங் வழங்கி பணம் சம்பாதிக்கலாம் என டாக்டரிடம் நூதன முறையில் ரூ.1 கோடி மோசடியில் ஈடுபட்டவர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
ரேட்டிங் வழங்கினால் பணம்
விரார் மேற்கு கோகுல் டவுன்சிப் பகுதியை சோ்ந்த 43 வயது டாக்டருக்கு கடந்த ஜனவரி மாதம் டெலிகிராமில் குறுந்தகவல் வந்தது. ஹபிசா என்ற பெண் அந்த குறுந்தகவலை அனுப்பி இருந்தார். அதில், புதிதாக வெளியாகும் படங்களுக்கு ஆன்லைனில் ரேட்டிங் வழங்கினால் பணம் சம்பாதிக்கலாம் என கூறப்பட்டு இருந்தது. இதையடுத்து டாக்டர் குறுந்தகவல் அனுப்பிய பெண்ணை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது பெண், டாக்டரின் வங்கி கணக்கு விவரங்களை கேட்டார். பின்னர் ஒரு படத்தின் ஆன்லைன் டிக்கெட்டை அனுப்பினார். டாக்டர் அந்த படத்தை பார்த்து அதற்கு 5 ஸ்டார் ரேட்டிங் கொடுத்தார். உடனடியாக டாக்டரின் வங்கி கணக்கிற்கு ரூ.830 வந்தது.
ரூ.1 கோடி மோசடி
இதைத்தொடர்ந்து டெலிகிராமில் அறிமுகமான பெண் மீண்டும் டாக்டரை தொடர்பு கொண்டு பேசினார். அவர் ஆன்லைன் திரைப்பட ரேட்டிங் தொழிலில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என ஆசைவார்த்தை கூறினார். இதைநம்பி டாக்டர் ரூ.1 கோடியே 9 லட்சத்தை பெண் கூறிய வங்கி கணக்கிற்கு அனுப்பி வைத்தார். ஆனால் பெண் கூறியது போல லாபம் எதுவும் கிடைக்கவில்லை. ஒரு கட்டத்தில் டாக்டரால் அந்த பெண்ணை தொடர்பு கொள்ள முடியவில்லை. அதன்பிறகு தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த டாக்டர் சம்பவம் குறித்து அர்னாலா போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து டாக்டரிடம் நூதன முறையில் ரூ.1 கோடியே 9 லட்சத்தை மோசடி செய்தவர்களை தேடிவருகின்றனர்.