பால்தாக்கரே கனவை நிறைவேற்றும் மோடி, அமித்ஷாவுக்கு ஏஜெண்டாக இருப்பதே சிறந்தது- கட்சி பொதுக்கூட்டத்தில் ஷிண்டே பேச்சு
|பால்தாக்கரே கனவை நிறைவேற்றும் மோடி, அமித்ஷாவுக்கு ஏஜெண்டாக இருப்பதே சிறந்தது என்று பொதுக்கூட்டத்தில் ஏக்நாத் ஷிண்டே பேசினார்.
மும்பை,
பால்தாக்கரே கனவை நிறைவேற்றும் மோடி, அமித்ஷாவுக்கு ஏஜெண்டாக இருப்பதே சிறந்தது என்று பொதுக்கூட்டத்தில் ஏக்நாத் ஷிண்டே பேசினார்.
பொதுக்கூட்டம்
உத்தவ் தாக்கரே மற்றும் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே அணியினர் ஏட்டிக்கு போட்டியாக ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று அவுரங்காபாத் மாவட்டம் பைதானில் நடந்த கட்சியின் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட முதல்-மந்திரி ஷிண்டே உத்தவ் தாக்கரே அணியை சாடினார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது:-
ஏமாற்றியது ஏன்?
மும்பையில் மராத்தி மக்களை முடிக்க பா.ஜனதா எங்களை பயன்படுத்துவதாக சாம்னா பத்திரிகையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இவ்வாறு எழுதும் சாம்னாவில், மும்பையை விட்டு மராத்தியர்கள் வெளியேறியது ஏன் என்பது பற்றிய ஆய்வையும் வெளியிட வேண்டும்.
2019-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவுடன் கூட்டணி வைத்து சிவசேனா வாக்காளர்களை சந்தித்தது. அதன் பிறகு வாக்காளர்களையும், இந்துத்வா கொள்கையையும் ஏமாற்றியது ஏன் என்பதையும் அவர்கள் ஆய்வு செய்ய வேண்டும்.
மோடியின் ஏஜெண்டு
பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவின் ஏஜெண்டு என்று என்னை குறிப்பிடுகிறார்கள். பால்தாக்கரேயின் கனவை நிறைவேற்றும் மற்றும் ஜம்மு- காஷ்மீருக்கு வழங்கப்பட்ட 370-வது சட்டப்பிரிவை ரத்து செய்தவர்கள் தான் அவர்கள். எனவே அவர்களின் ஏஜெண்டாக செயல்படுவதில் தவறு இல்லை. மும்பை குண்டு வெடிப்பு குற்றவாளி யாகூப் மேமனுக்கு ஏஜெண்டாக இருப்பதை விட மோடி, அமித்ஷாக்கு ஏஜெண்டாக இருப்பதே சிறந்தது.
யாகூப் மேமன் கல்லறை யார் ஆட்சியில் அலங்கரிக்கப்பட்டது என்பது பற்றி கண்டறியப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
யாகூப் மேமன் கல்லறை உத்தவ் தாக்கரே ஆட்சியின் போது அலங்கரிக்கப்பட்டதாகவும், இதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் பா.ஜனதா வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.