மராத்தா இடஒதுக்கீடு கோரிக்கையை வலியுறுத்தி மீண்டும் உண்ணாவிரதம் தொடங்கினார் மனோஜ் ஜரங்கே
|மராத்தா இடஒதுக்கீடு கோரிக்கையை வலியுறுத்தி காலவரையற்ற உண்ணாவிரதத்தை மீண்டும் மனோஜ் ஜரங்கே தொடங்கினார். அவர் முதல்-மந்திரி ஷிண்டே மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
மும்பை,
மராத்தா இடஒதுக்கீடு கோரிக்கையை வலியுறுத்தி காலவரையற்ற உண்ணாவிரதத்தை மீண்டும் மனோஜ் ஜரங்கே தொடங்கினார். அவர் முதல்-மந்திரி ஷிண்டே மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
உண்ணாவிரத போராட்டம்
மராத்தா சமூகத்தினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி கடந்த செப்டம்பர் மாதம் அந்த சமூகத்தை சேர்ந்த தலைவரான மனோஜ் ஜரங்கே உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். இந்த போராட்டத்தின் போது போலீசார் தடியடி நடத்தியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தநிலையில் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே மனோஜ் ஜரங்கேவை நேரில் சந்தித்து போராட்டத்தை வாபஸ் பெறுமாறு கேட்டுக்கொண்டார். இதையடுத்து கடந்த செப்டம்பர் மாதம் 14-ந் தேதி அன்று போராட்டத்தை வாபஸ் பெற்றார். இருப்பினும் இடஒதுக்கீட்டை வழங்க அரசுக்கு 40 நாட்கள் கெடு விதித்தார். இந்த கெடு நேற்று முன்தினத்துடன் முடிவுக்கு வந்தது. இதையடுத்து மனோஜ் ஜரங்கே தனது காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை நேற்று மீண்டும் தொடங்கினார். உண்ணாவிரத போராட்டத்தை தொடங்குவதற்கு முன்பு அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
தவறாக வழிநடத்துகிறது...
மராத்தா இடஒதுக்கீடு குறித்து முடிவெடுக்க 40 நாட்கள் காத்திருக்குமாறு முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே என்னிடம் கூறினார். ஆனால் அவர் தான் கூறியதுபோல நடந்துகொள்ளவில்லை. எனவே எனது கிராமத்தில் சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தை தொடங்க முடிவு செய்துள்ளேன். மாநிலம் முழுவதும் மராத்தா இடஒதுக்கீடுக்காக போராட்டம் நடத்தியவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் 2 நாட்களில் திரும்ப பெறப்படும் என்று என்னிடம் கூறப்பட்டது. இந்த உறுதிமொழி அளிக்கப்பட்டு 41 நாட்கள் கடந்தும் இதுவரை வழக்கை வாபஸ் பெறவில்லை. இதற்கு பொருள் ஒன்றுதான். இந்த அரசு வேண்டுமென்றே மராத்தா சமூகத்தை தவறாக வழிநடத்துகிறது. மாலி சமூகம் இதர பிற்படுத்தப்பட்டவர்களாக அங்கீகரிக்கப்பட்டு உள்ளது. எனெனில் அந்த சமூகத்தினரின் முதல் பணி விவசாயம் என்று கருதப்பட்டது. எனவே இது நடக்குமானால், விவசாயத்தை முதன்மை தொழிலாக கொண்ட நாங்கள் ஏன் இதற்கு தகுதி பெறவில்லை? இவ்வாறு அவர் கூறினார்.