கால்சென்டர் நடத்தி ஆபாச சாட்டிங் மூலமாக பணமோசடி செய்தவர் கைது- 17 பெண்கள் மீட்பு
|மும்பை மலாடு கான்ஞ்பாடா பகுதியில் கால்சென்டர் நடத்தி ஆபாச சாட்டிங் மூலமாக பணமோசடி செய்தவர் கைது
மும்பை,
மும்பை மலாடு கான்ஞ்பாடா பகுதியில் சீ லிங்க் மீடியா மற்றும் என்டர்டெயின்மென்ட் என்ற பெயரில் கால் சென்டர் இயங்கி வந்தது. இங்கு பெண்களை வைத்து ஆபாச உரையாடல் மூலம் பணம் பறிப்பு வேலைகளில் சிலர் ஈடுபட்டு வருவதாக போலீசாருக்கு புகார் வந்தது. இந்த புகாரின் படி போலீசார் கால்சென்டரில் அதிரடி சோதனை நடத்தினர். இச்சோதனையில் தகிசரை சேர்ந்த பிரிஜேஷ் சர்மா என்பவர் தான் கால்சென்டர் நடத்தி வந்தது தெரியவந்தது.
இவர் 17 பெண்களை பணியில் அமர்த்தி ஆன்லைன் சாட்டிங் அப்ளிகேஷன் செயலியில் இருந்த நம்பர்களை தொடர்பு கொள்ள செய்வார். இதன் பின்னர் அவர்களிடம் ஆபாச சாட்டிங் மற்றும் உரையாடல் மூலம் கவர்ந்து டிஜிட்டல் முறையில் பணத்தை பெற்று மோசடி நடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் பணியில் இருந்த 17 பெண்களை மீட்டனர். அவர்களிடம் இருந்த 19 செல்போன்கள் உள்பட கால்சென்டரில் இருந்த இதர பொருட்களை பறிமுதல் செய்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து பிரிஜேஷ் சர்மாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.