நவராத்திரி பண்டிகையின் போது 3 நாட்கள் நள்ளிரவு வரையில் ஒலிபெருக்கி பயன்படுத்த அனுமதி
|நவராத்திரி பண்டிகையின் போது மும்பையில் 3 நாட்கள் நள்ளிரவு வரையில் ஒலி பெருக்கி பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
மும்பை,
நவராத்திரி பண்டிகையின் போது மும்பையில் 3 நாட்கள் நள்ளிரவு வரையில் ஒலி பெருக்கி பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
பேச்சுவார்த்தை
கடந்த 2 ஆண்டாக கொரோனா தொற்று காரணமாக களை இழந்து காணப்பட்ட நவராத்திரி விழா நடப்பு ஆண்டில் மராட்டியத்தில் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவிற்கு புத்துணர்ச்சி வழங்கும் விதமாக கர்பா நடனம், கோலாட்ட நிகழ்ச்சிகளில் குறிப்பிட்ட நேரத்தில் ஒலி பெருக்கி பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே மற்றும் துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.
3 நாட்கள் அனுமதி
இதன்படி ஒழுங்குமுறை மற்றும் கட்டுப்பாட்டு விதிமுறைகளின் படி ஒலி மாசு ஏற்படாமல் இருக்க நவராத்திரி விழா கொண்டாட்டத்தின் போது வருகிற 1-ந் தேதி, 3-ந்தேதி மற்றும் 4-ந் தேதி வரை காலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை ஒலி பெருக்கி பயன்படுத்தி கொள்ளலாம்.
மேலும் மாவட்டத்தில் உள்ளூர் நிலைமைகளுக்கு ஏற்ப 2 நாட்கள் வரையில் விலக்கு அளிக்கப்படுகிறது. இதற்கான முடிவை எடுக்க மாவட்ட கலெக்டர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டு உள்ளது.