< Back
மும்பை
எம்.எல்.சி.யாகும் வாய்ப்பு 2 முறை பறிபோனது - பங்கஜா முண்டே வேதனை
மும்பை

எம்.எல்.சி.யாகும் வாய்ப்பு 2 முறை பறிபோனது - பங்கஜா முண்டே வேதனை

தினத்தந்தி
|
8 July 2023 1:00 AM IST

மேல்-சபை உறுப்பினராகும் வாய்ப்பு 2 முறை பறிபோனதாக பங்கஜா முண்டே தெரிவித்து உள்ளார்.

மும்பை,

மேல்-சபை உறுப்பினராகும் வாய்ப்பு 2 முறை பறிபோனதாக பங்கஜா முண்டே தெரிவித்து உள்ளார்.

2 முறை உறுப்பினர் வாய்ப்பு

பா.ஜனதாவை சேர்ந்த மறைந்த தலைவர் கோபிநாத் முண்டேவின் மகள் பங்கஜா முண்டே. முன்னாள் மந்திரியான இவர் தற்போது கட்சியில் இருந்து ஓரங்கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. கட்சி மீதான அதிருப்தியை பல முறை பங்கஜா முண்டே வெளிப்படுத்தி உள்ளார். இந்தநிலையில் அவர் நேற்று மும்பையில் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- 2019-ல் சட்டசபை தேர்தலில் தோல்வி அடைந்த பிறகு ஒரு ராஜ்யசபா உறுப்பினருக்கும், 2 முறை மாநில மேல்-சபை உறுப்பினர் பதவிக்கும் தேர்வு செய்யப்பட இருந்தேன். ஆனால் கடைசி நேரத்தில் அது நடக்காமல் போனது. இதுபற்றி நான் ஒருபோதும் வெளியில் பேசியதில்லை. கட்சியின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு இருந்தேன். கட்சி நலனுக்கு எதிராக நான் வேலை செய்தது இல்லை. அரசியல் எதை நோக்கி செல்கிறது. மக்கள் நலனில் யாருக்கும் அக்கறை இல்லை. நான் சுயபரிசோதனையில் ஈடுபட உள்ளேன்.

2 மாதம் ஓய்வு

வாஜ்பாய், தீனதயாள் உபாத்யாவின் சித்தாந்தத்தில் நம்பிக்கை கொண்ட பா.ஜனதா தொண்டன் நான். அந்த சித்தாந்தம் இருக்க வேண்டும் என விரும்புகிறேன். என்னுடைய சில பேச்சுகள் திரித்து கூறப்பட்டது. எனவே உங்களிடம் (ஊடகம்) இருந்து ஓய்வு எடுக்க விரும்பினேன். மோடி அரசின் 9 ஆண்டு சாதனை பற்றி கூற 105 பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் வேலை செய்தார்கள். தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் குறித்து(அஜித்பவார் பா.ஜனதா கூட்டணியில் இணைந்தது) பேச அவர்களுக்கு தைரியம் இல்லை. நான் நேர்மையற்ற அரசியலில் ஈடுபடமாட்டேன். எனக்கு தகுதி உள்ளதா, இல்லையா என்பது பற்றி கட்சி தான் கூற வேண்டும். நான் சரியாக நடத்தப்படவில்லையா என்பதற்கு காலம் தான் பதில் சொல்லும். எனது நேர்மை மீண்டும், மீண்டும் கேள்விக்கு உள்ளாகிறது. எனவே ஒன்று அல்லது 2 மாதம் ஓய்வு எடுக்க உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

தனஞ்செய் முண்டேக்கு வாழ்த்து

இதற்கிடையே பங்கஜா முண்டே, அவரது அரசியல் எதிரியும் ஒன்றுவிட்ட சகோதரருமான தேசியவாத காங்கிரசை சேர்ந்த தனஞ்செய் முண்டேயை சந்தித்து பேசியுள்ளார். இதுதொடர்பான படங்களை தனஞ்செய் முண்டே டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் பங்கஜா முண்டே, தனஞ்செய் முண்டேக்கு ஆரத்தி எடுத்து வாழ்த்து கூறுகிறார். மந்திரி பதவி ஏற்றதற்கு பங்கஜா முண்டே தனக்கு வாழ்த்து கூறியதாக தனஞ்செய் முண்டே கூறியுள்ளார். தனஞ்செய் முண்டேக்கு வாழ்த்து கூறியதாக வெளியான படங்கள் குறித்து பங்கஜா முண்டேவிடம் கேட்ட போது, அந்த படங்கள் இவ்வளவு விரைவாக ஏன் பதிவிடப்பட்டது என்பது பற்றி எனக்கு தெரியவில்லை, என்றார்.


மேலும் செய்திகள்