16 மாடி வணிக கட்டிடத்தில் 'லிப்ட்' அறுந்து விழுந்தது - 13 பேர் காயம்
|மும்பையில் 16 மாடி வணிக வளாக கட்டிடத்தில் லிப்ட் அறுந்து விழுந்து 13 பேர் காயடைந்தனர்.
மும்பை,
மும்பையில் 16 மாடி வணிக வளாக கட்டிடத்தில் லிப்ட் அறுந்து விழுந்து 13 பேர் காயடைந்தனர்.
16 மாடி கட்டிடம்
மும்பை லோயர் பரேல் கமலா மில் பகுதியில் 'டிரேடு வேல்டு டவர்' என்ற 16 மாடி வணிக வளாக கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தில் பல்வேறு கார்பரேட் நிறுவன அலுவலகங்களும் உள்ளன. கட்டிடத்தின் 4-வது மாடியில் நேற்று காலை லிப்ட் சென்று கொண்டு இருந்தது. அதில் 13 பேர் இருந்தனர். அப்போது திடீரென லிப்ட் அறுந்து வேகமாக சென்று தரை தளத்தில் விழுந்தது. இந்த விபத்தில் லிப்ட்டில் இருந்தவர்கள் அனைவரும் காயம் அடைந்தனர்.
மீட்பு
தகவல் அறிந்த தீயணைப்பு மற்றும் மாநகராட்சி மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அறுந்து விழுந்த லிப்டில் காயங்களுடன் சிக்கி இருந்த 13 பேரை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். இவர்களில் காயமடைந்த 8 பேரை தனியார் ஆஸ்பத்திரிக்கும், ஒருவரை கே.இ.எம். மாநகராட்சி ஆஸ்பத்திரிக்கும் அனுப்பி வைத்தனர். மேலும் லேசான காயமடைந்த 4 பேருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் அனைவரின் உடல் நிலையும் சீராக இருப்பதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து லிப்ட் விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.