< Back
மும்பை
உயிருக்கு அச்சுறுத்தல் எதிரொலி; நடிகர் ஷாருக்கானுக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு
மும்பை

உயிருக்கு அச்சுறுத்தல் எதிரொலி; நடிகர் ஷாருக்கானுக்கு 'ஒய்' பிளஸ் பாதுகாப்பு

தினத்தந்தி
|
10 Oct 2023 12:30 AM IST

உயிருக்கு அச்சுறுத்தலை அடுத்து இந்தி நடிகர் ஷாருக்கானுக்கு ‘ஒய்' பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

மும்பை,

உயிருக்கு அச்சுறுத்தலை அடுத்து இந்தி நடிகர் ஷாருக்கானுக்கு 'ஒய்' பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

கொலை மிரட்டல்

இந்தி நடிகர் ஷாருக்கான் நடிப்பில் வெளியான பதான் படத்தில் தீபிகா படுகோனே காவி நிற உடை அணிந்து கவர்ச்சி நடனம் ஆடியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த சர்ச்சையின் போது அயோத்தியை சேர்ந்த சாமியார் ஒருவர் ஷாருக்கானுக்கு கொலை மிரட்டல் விடுத்து இருந்தார். இதேபோல கடந்த ஆகஸ்ட் மாதம் ஆன்லைன் சூதாட்ட விளம்பரத்தில் நடிக்கும் பிரபலங்களுக்கு எதிராக போராட்டம் நடந்த போது மும்பை பாந்திராவில் உள்ள நடிகர் ஷாருக்கான் வீட்டின் முன் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

'ஒய்' பிளஸ் பாதுகாப்பு

இந்தநிலையில் மும்பை போலீசார் நடிகர் ஷாருக்கானுக்கு வழங்கி வரும் பாதுகாப்பை அதிகரித்து உள்ளனர். அவருக்கு 'ஒய்' பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட உள்ளது. சமீபத்தில் நடந்த மராட்டிய மாநில உளவுத்துறை கூட்டத்தில் ஷாருக்கானின் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், எனவே அவரது பாதுகாப்பை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதுதொடா்பாக கடந்த 5-ந் தேதி மாநில உள்துறை உத்தரவு பிறப்பித்து உள்ளது. தற்போது ஷாருக்கானின் பாதுகாப்பு பணியில் 2 போலீஸ்காரர்கள் மட்டும் ஈடுபட்டு வருகின்றனர். இனிமேல் அவரது பாதுகாப்பு பணியில் 6 கமாண்டோ படை வீரர்கள், 4 போலீசார் என மொத்தம் 11 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஒரு போக்குவரத்து ஒழுங்குப்படுத்தும் வாகனம் ஈடுபட்டு இருக்கும். நடிகரின் மன்னத் பங்களாவிலும் ஒரு போலீஸ்காரர் பாதுகாப்பு பணியில் இருப்பார் என கூறப்படுகிறது. ஷாருக்கானுக்கு வழங்கப்படும் 'ஒய்' பிளஸ் பாதுகாப்புக்காக அவரே கட்டணம் செலுத்த வேண்டும் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலிடம் இருந்து கொலை மிரட்டல் வந்ததை அடுத்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடிகர் சல்மான் கானுக்கும் 'ஒய்' பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்