< Back
மும்பை
சொத்து தகராறு காரணமாக 3 வயது சிறுவனை கடத்தி கொன்ற 4 பேருக்கு ஆயுள் தண்டனை- ஜல்னா கோர்ட்டு தீர்ப்பு
மும்பை

சொத்து தகராறு காரணமாக 3 வயது சிறுவனை கடத்தி கொன்ற 4 பேருக்கு ஆயுள் தண்டனை- ஜல்னா கோர்ட்டு தீர்ப்பு

தினத்தந்தி
|
22 Sept 2022 4:30 AM IST

சொத்து தகராறு காரணமாக 3 வயது சிறுவனை கடத்தி கொன்ற 4 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி ஜல்னா கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

ஜால்னா,

சொத்து தகராறு காரணமாக 3 வயது சிறுவனை கடத்தி கொன்ற 4 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி ஜல்னா கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

சிறுவன் கடத்தல்

ஜால்னா மாவட்டத்தை சேர்ந்தவர் ஜோதிவாலா. கடந்த 2016-ம் ஆண்டு இவரது சகோதரர் மனோஜ் என்பவருடன் சொத்து தகராறு காரணமாக அவ்வப்போது வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது. மேலும் குடும்ப சொத்தை சகோதருடன் பகிர்ந்து கொள்ள முடியாது என ஜோதிவாலா உறுதியாக தெரிவித்து இருந்தார். இதனால் சகோதரர்களிடையே பகையை ஏற்படுத்தியது.

கடந்த 2016-ம் ஆண்டு ஜூன் மாதம் 1-ந் தேதி ஜால்னாவில் நடந்த திருமண விழாவில் கலந்து கொண்ட ஜோதிவாலாவின் 3 வயது மகன் பவனை உறவினர்களான ராமேஷ்வர் (36), முகேஷ் (31), அவரது மனைவி நீது (30) மற்றும் பவன் (29) ஆகிய 4 பேர் சேர்ந்து கடத்தி சென்றனர்.

4 பேர் கைது

சிறுவனின் தலையில் கல்லால் தாக்கி கொன்றனர். பின்னர் உடலை ஜல்னா நகரில் உள்ள மந்தா சதுக்கத்தில் வீசி உள்ளனர்.

காணாமல் போன மகனை ஜோதிவாலா தேடிய போது கிடைக்காமல் போனதால் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் படி போலீசார் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் நடத்திய ஆய்வில் 4 பேர் கடத்தி சென்றதாக தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 4 பேரையும் கைது செய்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

ஆயுள் தண்டனை

விசாரணையின்போது 13 சாட்சிகளிடம் விசாரணை நடத்தியதில் 4 பேர் மீதான குற்றம் நிரூபணமானது. இதனை தொடர்ந்து குற்றவாளிகளான 4 பேருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.80 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி கே.எம். ஜெய்ஸ்வால் தீர்ப்பு அளித்தார்.

மேலும் கொலையான சிறுவனின் தாய்க்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடு வழங்கும்படியும் நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்