காங்கிரசுக்கு சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் பதவி- சபாநாயகர் அங்கீகரித்தார்
|காங்கிரசை சேர்ந்த விஜய் வடேடிவாரை எதிர்க்கட்சி தலைவராக சபாநாயகர் அங்கீகரித்தார்.
மும்பை,
காங்கிரசை சேர்ந்த விஜய் வடேடிவாரை எதிர்க்கட்சி தலைவராக சபாநாயகர் அங்கீகரித்தார்.
காலியான எதிர்க்கட்சி தலைவர் பதவி
மராட்டிய சட்டசபை எதிர்க்கட்சி தலைவராக இருந்த அஜித்பவார் கடந்த ஜூன் மாதம் 30-ந் தேதி பதவியை ராஜினாமா செய்தார். மேலும் துணை முதல்-மந்திரியானார். இதையடுத்து எதிர்க்கட்சி தலைவர் பதவி காலியாக இருந்தது. கடந்த 2019 சட்டசபை தேர்தலுக்கு பிறகு காங்கிரஸ் 45 தொகுதிகளில் வெற்றி பெற்று 4-வது இடத்தை பிடித்து இருந்தது. சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் உடைந்த நிலையில், எதிர்க்கட்சி வரிசையில் காங்கிரஸ் தான் பெரிய கட்சியாக உள்ளது.
விஜய் வடேடிவார் நியமனம்
இதனால் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் பதவியை காங்கிரஸ் உரிமை கோரியது. மேலும் அந்த பதவிக்கு முன்னாள் மந்திரியும், மூத்த எம்.எல்.ஏ.வுமான விஜய் வடேடிவாரை நியமிக்குமாறு பரிந்துரை செய்தது. இந்த நிலையில் நேற்று நடந்த சட்டசபை கூட்டத்தில் சபாநாயகர் ராகுல் நர்வேக்கர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ. விஜய் வடேடிவாரை எதிர்க்கட்சி தலைவராக அறிவித்தார்.
அவரை முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்-மந்திரிகள் தேவேந்திர பட்னாவிஸ், அஜித்பவார் ஆகியோர் எதிர்க்கட்சி தலைவர் இருக்கையில் அமர வைத்தனர். அவருக்கு மூத்த தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். 2014-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராதாகிருஷ்ண விகே பாட்டீல் எதிர்க்கட்சி தலைவராக இருந்தார். அவர் பா.ஜனதாவில் இணைந்த பிறகு விஜய் வாடேடிவார் 4 மாதங்கள் எதிர்க்கட்சி தலைவராக இருந்தாார் என்பது குறிப்பிடத்தக்கது.