< Back
மும்பை
வேதாந்தா தொழில் திட்டம் குஜராத் செல்வதற்கு மகா விகாஸ் அகாடி ஆட்சியின் போதே முடிவு எடுக்கப்பட்டதாக கூறுவது பொய்- அஜித்பவார் பேட்டி
மும்பை

வேதாந்தா தொழில் திட்டம் குஜராத் செல்வதற்கு மகா விகாஸ் அகாடி ஆட்சியின் போதே முடிவு எடுக்கப்பட்டதாக கூறுவது பொய்- அஜித்பவார் பேட்டி

தினத்தந்தி
|
21 Sept 2022 5:15 AM IST

மகாவிகாஸ் ஆட்சின் போதே வேதாந்தா-பாக்ஸ்கான் தொழில் திட்டம் குஜராத் செல்ல முடிவு எடுக்கப்பட்டதாக கூறுவது முற்றிலும் பொய் என எதிர்க்கட்சி தலைவர் அஜித்பவார் கூறியுள்ளார்.

மும்பை,

மகாவிகாஸ் ஆட்சின் போதே வேதாந்தா-பாக்ஸ்கான் தொழில் திட்டம் குஜராத் செல்ல முடிவு எடுக்கப்பட்டதாக கூறுவது முற்றிலும் பொய் என எதிர்க்கட்சி தலைவர் அஜித்பவார் கூறியுள்ளார்.

குஜராத் சென்ற நிறுவனம்

வேதாந்தா- பாக்ஸ்கான் நிறுவனங்கள் இணைந்து மராட்டியத்தில் பிரமாண்ட செமி கன்டக்டர் நிறுவனம் அமைக்க திட்டமிட்டன. இந்த நிறுவனத்தால் 1½ லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என கூறப்படுகிறது. இந்தநிலையில் மராட்டியத்தில் இருந்து கைநழுவிய இந்த திட்டத்தை, குஜராத் மாநிலம் கைப்பற்றியுள்ளது. இந்த திட்டத்தை குஜராத்தில் தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

மராட்டியத்திற்கு வரவேண்டிய திட்டம் குஜராத்திற்கு சென்றதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

இதற்கு பதிலளித்த துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், கடந்த மகாவிகாஸ் ஆட்சியின் போதே வேதாந்தா- பாக்ஸ்கான் தொழில் திட்டம் குஜராத்துக்கு மாறும் முடிவு எடுக்கப்பட்டு விட்டதாக கூறினார். மேலும் அவர் கடந்த மகாவிகாஸ் ஆட்சியின் போது நிறுவனங்களுக்கு அறிவிக்கப்படும் மானியங்களுக்கு 10 சதவீதம் கமிஷன் கொடுக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

அஜித்பவார் மறுப்பு

இந்தநிலையில் தேவேந்திர பட்னாவிசின் பேச்சுக்கு எதிர்க்கட்சி தலைவர் அஜித்பவார் மறுப்பு தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறுகையில், "உங்களுக்கு தைரியம் இருந்தால் மகாவிகாஸ் அகாடி அரசு வேதாந்தா நிறுவனத்திடம் பணம் கேட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்த உத்தரவிடுங்கள். அவர்கள் (பா.ஜனதா) தான் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் உள்ளனர். விசாரணை முகமைகளும் அவர்களுடன் தான் உள்ளது. அவர்கள் விசாரித்தால் எல்லாம் தெரிந்துவிடும்.

முற்றிலும் பொய்

முதல்-மந்திரி டெல்லி செல்வதாக தகவல் வருகிறது. அவர் வேதாந்தா- பாக்ஸ்கான் நிறுவனம் மீண்டும் மராட்டியம் வர நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது உள்ள அரசு ஆட்சிக்கு வரும் முன்பே வேதாந்தா- பாக்ஸ்கான் நிறுவனம் குஜராத் செல்ல முடிவு எடுத்துவிட்டதாக சிலர் வதந்தியை பரப்புகின்றனர். அது முற்றிலும் பொய்.

கடந்த ஜூலை 15-ந் தேதி இந்த விவகாரம் தொடர்பாக தலைமை செயலாளர் தலைமையிலான உயர்மட்ட கமிட்டி கூட்டம் நடந்து உள்ளது. ஆனால் ஜூன் மாதமே மகாவிகாஸ் ஆட்சி கவிழ்ந்துவிட்டது" என்றார்.

மேலும் செய்திகள்