< Back
மும்பை
சந்திராப்பூரில் பா.ஜனதா பிரமுகரின் மனைவி சுட்டுக்கொலை; ஒருவர் காயம்
மும்பை

சந்திராப்பூரில் பா.ஜனதா பிரமுகரின் மனைவி சுட்டுக்கொலை; ஒருவர் காயம்

தினத்தந்தி
|
24 July 2023 7:00 PM GMT

சந்திராப்பூரில் பா.ஜனதா பிரமுகரின் மனைவி சுட்டுக்கொலை செய்யப்பட்டார். மற்றொருவர் துப்பாக்கி சூட்டில் பலத்த காயம் அடைந்தார்.

சந்திராப்பூர்,

சந்திராப்பூரில் பா.ஜனதா பிரமுகரின் மனைவி சுட்டுக்கொலை செய்யப்பட்டார். மற்றொருவர் துப்பாக்கி சூட்டில் பலத்த காயம் அடைந்தார்.

முன்விரோதம்

சந்திரப்பூர் மாவட்டம் ரஜுரா தாலுகாவில் உள்ள சோம்நாத்பூர் பகுதியை சேர்ந்தவர் லல்லி ஷெர்கில். இவருக்கு அதே பகுதியை சேர்ந்த சிலருடன் முன்விரோதம் இருந்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் நேற்று தனது வீட்டின் அருகில் லல்லி ஷெர்கில் நடந்து சென்றுகொண்டு இருந்தார். அப்போது எதிர்தரப்பை சேர்ந்த சிலர் கையில் துப்பாக்கியுடன் தன்னை நோக்கி நெருங்கி வருவதை அவர் கண்டார். அவர்கள் தன்னை கொலை செய்யும் நோக்கத்துடன் வந்திருப்பதை உணர்ந்துகொண்ட லல்லி ஷெர்கில் அவர்களிடம் இருந்து தப்பி ஓட்டம் பிடித்தார். ஆனால் கும்பலும் அவரை துப்பாக்கியுடன் துரத்தியது. இதனால் பாதுகாப்பிற்காக அவர் தனது நண்பரான சச்சின் தோகே வீட்டிற்குள் நுழைந்தார். அப்போது அவர்கள் லல்லி ஷெர்கில் நோக்கி துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட தொடங்கினர்.

பெண் உயிரிழப்பு

அப்போது சச்சின் தோகேவின் மனைவி புர்வ்ஷா சத்தம் கேட்டு ஓடிவந்தார். அப்போது குண்டு தவறுதலாக புர்வ்ஷாவின் மார்பில் பாய்ந்தது. இதில் படுகாயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். கொலை வெறி அடங்காத அந்த கும்பல் லல்லி ஷெர்கில் முதுகில் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினர். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த இருவரையும் போலீசார் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு நடத்திய பரிசோதனையில் புர்வ்ஷா ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது.

2 பேர் கைது

பலத்த காயம் அடைந்துள்ள லல்லி ஷெர்கிலுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. உயிரிழந்த புர்ஷ்வாவின் கணவர் சச்சின் தோகே பா.ஜனதா இளைஞர் அணி பிரிவின் மாவட்ட துணை தலைவராக இருப்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தீவிர விசாரணை நடத்தினர். மேலும் சம்பவம் தொடர்பாக 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்