வசாய் ரெயில் நிலையம் அருகே விபசார அழகிகளின் தொல்லை அதிகரிப்பு- காவல் துறை கடமையாற்றுமா?
|மேற்கு ரெயில்வே வழித்தடத்தில் வசாய் ரெயில் நிலையம் உள்ளது.
மேற்கு ரெயில்வே வழித்தடத்தில் வசாய் ரெயில் நிலையம் உள்ளது.
வரிசைக்கட்டும் விபசார அழகிகள்
இந்த ரெயில் நிலையம் மேற்கு பகுதியில் உள்ள பிளாட்பாரத்தில் இறங்கும் பயணிகள் மராட்டிய அரசு போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான பஸ் நிலையம் வழியாக தான் கடந்து சென்று குறிப்பிட்ட இடத்திற்கு செல்ல வேண்டும்.
இரவு நேரங்களில் அந்த வழியாக செல்லும் பெண் பயணிகள் கடும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். ஏனெனில் அந்த வேளைகளில் விபசார தொழிலில் ஈடுபடும் பெண்கள் வரிசைக்கட்டிக்கொண்டு வாடிக்கையாளர்களை உல்லாசத்திற்கு வலைவீசும் வேலையில் ஈடுபடுகிறார்கள்.
மற்ற பெண்கள் பாதிப்பு
இரவு நேரத்தில் வரும் பெண் பயணிகள் தங்களின் உறவினர் வருகைக்காக அங்கு காத்து நிற்கும் சூழ்நிலை ஏற்படுகிறது. அந்த தருணத்தில் விபசார அழகிகளை நோட்டமிட்டு வரும் ஆண்கள் சிலர், அங்கு உறவினர்களுக்காக காத்து நிற்கும் பெண்களையும் உல்லாசத்திற்கு அழைக்கும் அவலம் அரங்கேறுகிறது.
இதனால் அப்பெண் பயணிகள் கடும் வேதனைக்கு ஆளாகி வருகின்றனர். இது போன்ற சம்பவம் அடிக்கடி அங்கு நிகழ்ந்து வருவதால் பெண் பயணிகள் இரவு நேரங்களில் செல்ல அச்சமடைந்து உள்ளனர். இது தொடர்பாக போலீசில் புகார் அளிக்கும் நிலையில் விபசார பெண்களை அந்த நேரத்தில் மட்டும் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ரெயில் நிலையத்திற்கு தப்பி ஓட்டம்
மேலும் போலீசாரின் ரோந்து வாகனத்தை பார்க்கும்போது விபசார பெண்கள் அங்கிருந்து தப்பி ரெயில் நிலையத்திற்கு சென்று தஞ்சம் அடைகின்றனர். இதனால் போலீசாரின் பிடியில் சிக்காமல் இலகுவாக தப்பி வருகின்றனர்.
எனவே போலீசாரின் முயற்சி பொதுமக்களுக்கும், பயணிகளுக்கும் பயன்படவில்லை. ஆகவே ரெயில் நிலையம் அருகே நடமாடும் விபசார பெண்களை முற்றிலும் அப்புறப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
தீவிர நடவடிக்கை வேண்டும்
இது பற்றி ரெயில் நிலையம் அருகே நாளிதழ் விற்பனை செய்து வரும் செல்லையா என்பவர் கூறுகையில், "விபசார பெண்களால் மற்ற பெண்களும் பாதிக்கப்படும் சூழ்நிலை தினசரி நடைபெறுகிறது. இரவு நேரத்தில் வெளியூர் செல்லும் பயணிகள் அந்த வழியாக கடந்து செல்லும் வேளையில் வழிப்பறி கும்பல்களாலும் பாதிக்கப்படுகின்றனர். தகவல் தொழில்நுட்பம் நிறைந்த நமது நாட்டில் இப்படிப்பட்ட சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுவதை தடுக்க முடியாமல் இருப்பது சரியல்ல. காவல் துறை அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.