< Back
மும்பை
பல மாவட்டங்களில் கனமழை; 3 பெண்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர்
மும்பை

பல மாவட்டங்களில் கனமழை; 3 பெண்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர்

தினத்தந்தி
|
12 Sept 2022 7:08 PM IST

மராட்டியத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்தது. அவுரங்காபாத்தில் 3 பெண்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர்.

மும்பை,

மராட்டியத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்தது. அவுரங்காபாத்தில் 3 பெண்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர்.

கனமழை

மராட்டியத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று பல மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. குறிப்பாக மரத்வாடா, கொங்கன், விதர்பா, மத்திய மராட்டியம் ஆகிய மண்டலங்களில் கனமழை பெய்தது.

இந்த மழை காரணமாக அந்த பகுதிகளில் உள்ள ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. ஏரி, குளங்கள் நிரம்பி வருகின்றன.

வெள்ளத்தில் சிக்கிய 3 பெண்கள்

அவுரங்காபாத்தில் உள்ள வாலாஜ் மகாநகர் மற்றும் திஸ்காவ் பகுதியில் பலத்த மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் ராஜஸ்தானை சேர்ந்த 3 பெண்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர்.

தகவல் அறிந்த மீட்பு படையினர் விரைந்து சென்றனர். அவர்கள் 2 பெண்களை போராடி மீட்டனர். மற்றொரு பெண்ணை மீட்க முடியவில்லை. மாயமான அவரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

மின்னல் தாக்கி ஒருவர் பலி

புலும்பரி தாலுகாவில் உள்ள காம்காவ் கிராமத்தில் பல வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. அங்கு விளைநிலங்கள் மழை நீரில் மூழ்கின. இதனால் பயிர்கள் நாசம் அடைந்தன.

அவுரங்காபாத் அருகே உள்ள வரலாற்று சிறப்புமிக்க ஹர்சுல் ஏரி நிரம்பி வழிகிறது. அம்பாத் தாலுகாவில் மாசை தண்டாவில் மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழந்தார்.

மேலும் செய்திகள்