< Back
மும்பை
சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க மனுக்கள் மீது இன்று விசாரணை - சபாநாயகர் அறிவிப்பு
மும்பை

சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க மனுக்கள் மீது இன்று விசாரணை - சபாநாயகர் அறிவிப்பு

தினத்தந்தி
|
12 Oct 2023 12:45 AM IST

சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க மனுக்கள் மீதான விசாரணை இன்று நடைபெறுவதாக சபாநாயகர் ராகுல் நர்வேகர் தெரிவித்தார்.

மும்பை,

சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க மனுக்கள் மீதான விசாரணை இன்று நடைபெறுவதாக சபாநாயகர் ராகுல் நர்வேகர் தெரிவித்தார்.

தகுதிநீக்க மனு

மராட்டியத்தில் சிவசேனா தலைமையிலான மகா விகாஸ் அகாடி அரசு சிவசேனா கட்சியில் ஏற்பட்ட பிளவின் காரணமாக கவிழ்ந்தது. சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் அதிருப்தி எம்.எம்.ஏ.க்கள் பிரிந்து சென்று பா.ஜனதா கூட்டணியில் கைகோர்த்தனர். இதைத்தொடர்ந்து பா.ஜனதாவும், ஷிண்டே தலைமையிலான சிவசேனாவும் இணைந்து ஆட்சியை கைப்பற்றியது. இந்த குழப்பமான சமயத்தில் பிளவுப்படாத சிவசேனா கட்சியின் தலைமை கொறடாவாக இருந்த சுனில் பிரபு, ஏக்நாத் ஷிண்டே உள்பட அவரது அணியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக தகுதி நீக்க மனுவை சபாநாயகரிடம் தாக்கல் செய்தார். இதேபோல ஷிண்டே அணியினரும் தகுதி நீக்க மனுக்களை அளித்தனர். இது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வந்தது.

சபாநாயகர் நோட்டீஸ்

இந்த மனு மீது கடந்த மே 11-ந் தேதி தீர்ப்பு வழங்கிய கோர்ட்டு, தகுதி நீக்க வழக்கு குறித்து சபாநாயகர் ராகுல் நர்வேகர் நியாயமான காலத்திற்குள் முடிவெடுக்க உத்தரவிட்டது. ஆனால் சபாநாயகர் முடிவெடுப்பதில் வேண்டும் என்றே தாமதம் செய்து வருவதாக உத்தவ் பாலாசாகேப் சிவசேனா கட்சியினர் குற்றம் சாட்டி வருவதுடன், இதுகுறித்து சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இதையடுத்து கடந்த ஜூலை மாதம் சபாநாயகர் ராகுல் நர்வேகர் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான 40 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் உத்தவ் தாக்கரே தரப்பை சேர்ந்த 14 பேருக்கும் அதிரடியாக நோட்டீஸ் அனுப்பி இருந்தார். தங்களுக்கு எதிரான தகுதி நீக்க மனுக்கள் குறித்து பதில் அளிக்க கோரி இருந்தார். மேலும் மனுக்கள் மீதான விசாரணையை தொடங்கினார். இந்த மனுவின் அடுத்த கட்ட விசாரணை வரும் 13-ந் தேதி(நாளை) நடைபெறும் என்று கூறப்பட்டு இருந்தது. இந்தநிலையில் செய்தியாளர்களிடம் சபாநாயகர் ராகுல் நர்வேகர் கூறியதாவது:-

டெல்லி மாநாடு

தகுதி நீக்க மனுக்கள் மீதான அடுத்த விசாரணை வெள்ளிக்கிழமை(நாளை) நடைபெறுவதாக இருந்தது. ஆனால் அன்றைய தினம் டெல்லியில் ஜி-20 சபாநாயகர்கள் உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இதில் கலந்துகொள்ள வேண்டும் என்பதால், விசாரணை அட்டவணை மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. அதன்படி வெள்ளிக்கிழமைக்கு பதிலாக ஒருநாள் முன்பாக வியாழக்கிழமை( இன்று) விசாரணை நடைபெறுகிறது. விசாரணை தேதியை என்னால் பின்னர் ஒருநாள் மாற்றி வைத்திருக்க முடியும். ஆனால் மேலும் இந்த விவகாரத்தில் தாமதத்தை ஏற்படுத்த விரும்பாத காரணத்தால் நான் அப்படி செய்யவில்லை. இந்த தகுதி நீக்கம் குறித்து விசாரணையை விரைந்து முடிவெடுக்க விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்