வசாயில் இருந்து மும்பைக்கு கடத்த முயன்ற ரூ.57 லட்சம் குட்கா பறிமுதல்; 3 பேர் கைது
|வசாயில் இருந்து மும்பைக்கு கடத்த முயன்ற ரூ.57 லட்சம் குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
வசாய்,
வசாயில் இருந்து மும்பைக்கு கடத்த முயன்ற ரூ.57 லட்சம் குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
குட்கா கடத்தல்
பால்கர் மாவட்டம் வசாய் கிழக்கு ஜூசந்திராவில் இருந்து மும்பைக்கு தடை செய்யப்பட்ட குட்கா (போதைப்பாக்கு) கடத்தப்படுவதாக மிராபயந்தர்- வசாய்விரார் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் சசூன் நவ்கர் பகுதியில் கடந்த 22-ந் தேதி மாலை ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது, அங்கு சந்தேகப்படும் வகையில் 7 டெம்போக்கள் நின்ற நிலையில், லாரியில் இருந்து சரக்குகளை டெம்போவிற்கு சிலர் மாற்றிக்கொண்டு இருந்ததை போலீசார் கண்டனர்.
3 பேர் கைது
உடனடியாக அங்கு சென்றபோது போலீசாரை கண்ட வாகன டிரைவர்கள் அங்கிருந்து தப்பி காட்டிற்குள் ஓடினர். போலீசார் விரட்டி சென்று அவர்களில் 3 பேரை மடக்கி பிடித்தனர். மற்ற 7 பேர் தப்பி ஓடிவிட்டனர். இதைத்தொடர்ந்து போலீசார் டெம்போவில் சோதனை செய்தபோது, அதில் தடை செய்யப்பட்ட குட்காவை மும்பைக்கு கடத்தி கொண்டு செல்ல முயன்றது தெரியவந்தது. இதனையடுத்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார் குட்கா கடத்த பயன்படுத்தப்பட்ட 8 வாகனங்களை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட குட்காவின் மதி்ப்பு ரூ.56 லட்சத்து 90 ஆயிரம் ஆகும். இது குறித்து போலீசாார் வழக்கு பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர். மேலும் தப்பிஓடிய 7 பேரை வலைவீசி தேடிவருகின்றனர்.