
புனேயில் அரசு பஸ்- லாரி மோதல்: ஒருவர் பலி- 5 பேர் படுகாயம்

புனேயில் அரசு பஸ், லாரி மோதிய விபத்தில் ஒருவர் பலியானார். 5 பேர் படுகாயமடைந்தனர்.
புனே,
புனேயில் அரசு பஸ், லாரி மோதிய விபத்தில் ஒருவர் பலியானார். 5 பேர் படுகாயமடைந்தனர்.
பஸ்- லாரி மோதி விபத்து
மாநில போக்குவரத்து கழகத்துக்கு சொந்தமான அரசு பஸ் ஒன்று நேற்று முன்தினம் இரவு பண்டர்பூரில் இருந்து புனேயில் சுவர்கேட் நோக்கி வந்து கொண்டு இருந்தது. இதில் பஸ் நேற்று அதிகாலை 12.30 மணிக்கு புனே சாஸ்வட் ரோட்டில் உருலி தேவச்சி கிராமம் அருகே வந்து கொண்டு இருந்தது.
அப்போது எதிர்பாராதவிதமாக பஸ்சும் அந்த வழியாக வந்த கண்டெய்னர் லாரியும் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் பஸ், லாரியின் முன்பகுதி நொறுங்கியது. மேலும் பஸ் டிரைவர் மற்றும் அவருக்கு பின்னால் இருந்த பயணிகள் உள்பட 6 பேர் படுகாயமடைந்தனர்.
ஒருவர் பலி
தகவல் அறிந்து சென்ற போலீசார், தீயணைப்பு துறையினர் உதவியுடன் பஸ்சின் இடிபாடுகளில் சிக்கி இருந்தவர்கள், காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதில் ஒரு பயணி கொண்டு வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் கூறினர்.
காயமடைந்த மற்ற பயணிகள், டிரைவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.