ராமர் கோவில் திறப்பு விழாவின்போது கோத்ரா ரெயில் எரிப்புபோன்று மீண்டும் நடைபெற வாய்ப்பு; உத்தவ் தாக்கரே கூறுகிறார்
|ராமர் கோவில் திறப்பு விழாவின்போது கோத்ரா ரெயில் எரிப்புபோன்ற சம்பவம் மீண்டும் நடைபெறலாம் என உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்
மும்பை,
குஜராத்தில் உள்ள கோத்ரா ரெயில் நிலையத்தில் கடந்த 2002-ம் ஆண்டு பிப்ரவரி 27-ந்தேதி அயோத்தியிலிருந்து புறப்பட்ட சபர்மதி எக்ஸ்பிரஸ் ரெயில் மர்மநபர்களால் தீவைத்து எரிக்கப்பட்டது. இதில் பலர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் குஜராத் மாநிலம் முழுவதும் பெரும் கலவரத்தை தூண்டியது. இந்தநிலையில் இதேபோன்ற சம்பவம் மீண்டும் நடைபெற வாய்ப்பு உள்ளதாக உத்தவ் பாலாசாகேப் கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:- அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவுக்கு அரசு அதிக அளவில் மக்களை பஸ்களிலும், லாரியிலும் அழைத்து வர வாய்ப்பு உள்ளது. அவர்கள் மீண்டும் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பும் பயணத்தின்போது கோத்ராவில் நடந்தது போன்ற சம்பவம் நடக்கலாம். பா.ஜனதா கட்சி மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு முன்னிலை படுத்தும் அளவிற்கு மிகசிறந்த தலைவர்கள் அவர்களிடம் இல்லை. எனவே அவர்கள் சர்தார் படேல் மற்றும் நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் போன்ற தலைவர்களை தன்வசப்படுத்த முயற்சிக்கின்றனர். அவர்கள் தற்போது மறைந்த சிவசேனா நிறுவனர் பால் தாக்கரேவையும் சொந்தம் கொண்டாட முயற்சிக்கின்றனர். பா.ஜனதாவும், ஆர்.எஸ்.எஸ்.சும் தங்களுக்கென்று எந்த சாதனையும் செய்யவில்லை. சர்தார் படேலுடைய சிலையில் அளவு இல்லை. அவரது சாதனைகள் தான் முக்கியம். அவர்களால் சர்தார் படேலுடைய பெருமைக்கு அருகில் கூட செல்ல முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.