< Back
மும்பை
மாடல் தேவைப்படுவதாக கூறி பெண்ணிடம் ரூ.3.25 லட்சம் மோசடி- கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு
மும்பை

மாடல் தேவைப்படுவதாக கூறி பெண்ணிடம் ரூ.3.25 லட்சம் மோசடி- கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு

தினத்தந்தி
|
24 July 2022 4:30 PM GMT

ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு மாடல் தேவைப்படுவதாக கூறி பெண்ணிடம் ரூ.3.25 லட்சம் மோசடி செய்த கும்பலை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

மும்பை,

ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு மாடல் தேவைப்படுவதாக கூறி பெண்ணிடம் ரூ.3.25 லட்சம் மோசடி செய்த கும்பலை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

குறுந்தகவல்

மும்பை அந்தேரி ஜே.பி. நகர் பகுதியை சேர்ந்த 32 வயது பெண் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இப்பெண்ணுக்கு கடந்த 13-ந்தேதி செல்போனில் குறுந்தகவல் ஒன்று வந்தது. அதில், பிரபல ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு சிறுமி மாடல் தேவைப்படுவதாகவும், விருப்பமுடையவர்கள் லிங்க்கை தொடர்பு கொள்ளும்படியும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதன்படி செயல்பட்ட பெண்ணிடம் சாக்சி என்பவர் தொடர்பு கொண்டு பேசினார்.

இதில், தனது 5 வயது மகளை மாடலிங் செய்ய விருப்பம் இருப்பதாக சாக்சிடம் தெரிவித்தார். இதனால் சாக்சி அப்பெண்ணிடம் சிறுமியின் படங்களை வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்குமாறு தெரிவித்தார். பின்னர் அப்பெண்ணிடம் சிறுமி மாடலிங்குக்கு தேர்வு செய்யப்பட்டதாகவும் ஆடியோ ரெக்கார்டிங் தேர்வுக்காக ரூ.29 ஆயிரம் கட்டணம் செலுத்தும்படி தெரிவித்தார்.

ரூ.3.25 லட்சம் அபேஸ்

அந்த பணத்தை செலுத்திய பிறகு 20-ந்தேதி அப்பெண்ணை தொடர்பு கொண்ட ஒருவர் மாடலிங்கிற்காக சிறுமியை நிறுவனம் ஒப்புதல் வழங்கி இருப்பதாகவும், புகைப்பட சூட்டிங் விரைவில் நடைபெற இருப்பதால் ரூ.2 லட்சம் டெபாசிட் செய்ய வேண்டும் என பெண்ணிடம் தெரிவித்தனர். மேலும் இந்த பணம் திரும்ப கிடைத்துவிடும் என கூறினர். இதனையும் நம்பிய அப்பெண் மொத்தம் ரூ.3 லட்சத்து 25 ஆயிரத்தை டெபாசிட் செய்திருந்தார். இதன்பின்னர் அழைப்புகள் எதுவும் வராததால் பிரபல ரிலையன்ஸ் நிறுவனத்தை தொடர்பு கொண்டு விசாரித்தார்.

அப்போது அந்த அழைப்பு போலியானது என தெரியவந்தது.

இதனால் பதறிப்போன அப்பெண் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் படி போலீசார் வழக்கு பதிவு செய்து மோசடி கும்பலை பிடிக்க விசாரணை நடத்தி வருகின்றனர்.


மேலும் செய்திகள்