மாவட்ட செய்திகள்
லஞ்சம் வாங்கிய வனக்காவலர் கைது
|தகானுவில் லஞ்சம் வாங்கிய வனக்காவலரை போலீசார் கைது செய்தனர்.
வசாய்,
பால்கர் மாவட்டம் தகானு தாலுகா காசாவில் வனகாவலராக வேலை பார்த்து வருபவர் விஜய் சோனாவானே (வயது30). இவர் அதே பகுதியை சேர்ந்த ஒருவருக்கு வனப்பகுதியில் அமைந்து உள்ள நிலத்தில் சுவர் கட்ட அனுமதி அளித்திருந்தார். இதற்காக ரூ.10 ஆயிரத்தை பெற்று கொண்டார். இருப்பினும் அவர் மீண்டும் ரூ.10 ஆயிரம் லஞ்சம் தரும்படி கேட்டு உள்ளார். இதனால் புகார்தாரர் பணம் தருவதாக கூறி சம்பவம் குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.
இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் வழங்கிய யோசனைப்படி சம்பவத்தன்று வனக்காவலர் விஜய் சோனாவானேவை சந்தித்து அவரிடம் ரூ.10 ஆயிரம் பணத்தை கொடுக்க சென்றார். அப்போது அங்கிருந்த காய்கறி வியாபாரி நிதின் போய் (34) என்பவரிடம் லஞ்சத்தை கொடுக்கும்படி அவர் தெரிவித்துள்ளார். இதன்படி பணத்தை பெற்ற காய்கறி வியாபாரியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். மேலும் லஞ்ச வழக்கில் தொடர்புடைய காவலர் விஜய் சோனாவானேவையும் கைது செய்தனர்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.