மாவட்ட செய்திகள்
மராட்டியத்தில் மீன்பிடி தடைக்காலம் 1-ந் தேதி தொடங்குகிறது
|மராட்டிய கடல் பகுதியில் மீன்பிடி தடைக்காலம் 1-ந் தேதி தொடங்கி ஜூலை 31-ந் தேதி வரை கடைப்பிடிக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.
மும்பை,
மராட்டிய கடல் பகுதியில் மீன்பிடி தடைக்காலம் 1-ந் தேதி தொடங்கி ஜூலை 31-ந் தேதி வரை கடைப்பிடிக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.
அரசு அறிவிப்பு
கடல் மீன்வளத்தை பாதுகாக்கும் நோக்கத்துடன், மராட்டிய கடல்பகுதியில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் மீன்பிடி தடைக்காலம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த மீன் பிடி தடைகாலத்தில் மாநிலத்தின் கடற்படையிலிருந்து 12 கடல் மைல்களுக்குள் இயந்திரங்கள் மூலம் மீன் பிடிப்பது தடை செய்யப்படுகிறது.
இந்த மீன்படி தடைக்காலம் ஜூன் மாதம் 1-ந் தேதி தொடங்கி ஜூலை 31-ந் தேதி வரை கடைப்பிடிக்கப்படும் என மராட்டிய அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து மீன்வளத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
அதிக அபராதம்
ஒவ்வொரு ஆண்டும், மராட்டிய அரசு இதுபோன்ற தடையை விதிக்கிறது. இந்த தடையை மீறினால் அபராதம் விதிக்கப்படும். முன்பு அபராதத்தொகை கணிசமாக குறைவாக இருந்தது. இது பலர் தடையை வெளிப்படையாக மீறுவதற்கு வழிவகுத்தது. ஆனால் இந்த ஆண்டு ஜூன் முதல் தடையை மீறுபவர்களுக்கு அதிக தொகை அபராதமாக விதிக்கப்படும்.
ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் கடல் சீற்றம் அதிகமாக இருக்கும். இது மீன்கள் அதிக அளவில் இனப்பெருக்கம் செய்யும் காலமாகும். இந்த காலகட்டத்தில் மீன்பிடிப்பில் ஈடுபடுவது உணவு சங்கிலியை மோசமாக பாதிக்கலாம். மேலும் இந்த நேரத்தில் கடலில் மீன்பிடிப்பதும் ஆபத்தானது.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் என்ஜின் இல்லாத பாரம்பரிய படகுகளை பயன்படுத்தும் மீனவர்களுக்கு இந்த தடையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.