அடுக்குமாடி குடியிருப்பில் தீ; கரும்புகையில் சிக்கி முதியவர் பலி
|சாந்தாகுருஸ் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் கரும்புகையில் சிக்கி முதியவர் பலியானார்
மும்பை,
மும்பை சாந்தாகுருஸ் மேற்கு தாகூர் சாலையில் 7 மாடி கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் உள்ளது. நேற்று பிற்பகல் 3.45 மணி அளவில் 6-வது மாடியில் உள்ள ஒரு வீட்டில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் கட்டிடத்தின் 6-வது மாடிக்கு விரைந்து சென்றனர். அங்கு கரும்புகையில் சிக்கி இருந்த 2 பேரை மீட்டு பத்திரமாக அழைத்து வந்தனர். பின்னர் உடனடியாக இருவரையும் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மூச்சுத்திணறல் காரணமாக 65 வயதுடைய முதியவர் உயிரிழந்தார். மற்றொருவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாடியில் பற்றிய தீயை வீரர்கள் அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சிறிது நேரத்தில் அங்கு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீ விபத்தில் சிக்கி பலியான முதியவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.